அனைத்து தேசிய பூங்காக்களுக்கும் மூன்று நாள் பூட்டு!

நாடளாவிய ரீதியில் காட்டு யானைகளை கணக்கெடுப்பை கருத்திற் கொண்டு நாட்டின் அனைத்து தேசிய பூங்காக்களும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை மூடப்படும் என்று வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த யானைகள் கணக்கெடுப்பானது எதிர்வரும் செப்டெம்பர் 13 ஆம், 14 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. வனஜீவராசிகள் திணைக்களத்தினால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்காக நீர் நிலைகளுக்கு அருகிலுள்ள சுமார் 250 வனப் பிரதேசங்கள் குறித்த திணைக்களத்தினரால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஹசினி சரச்சந்திர தெரிவித்துள்ளார்.

4,500 பேரை இணைத்து யானைகளை கணக்கெடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இறுதியாக கடந்த 2011 ஆம் ஆண்டிலேயே யானைகளை கணக்கெடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதோடு, அவ்வேளையில் காட்டு யானைகளின் எண்ணிக்கை 5,879 ஆகும். எவ்வாறாயினும் இக்கணக்கெடுப்பின்போது, வடக்கு, கிழக்கில் சில இடங்களில் அப்போது கணக்கெடுப்பு மேற்கொள்ள முடியாதிருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது நாடு முழுவதும் காட்டு யானைகளை கணக்கெடுக்கும் முதலாவது நடவடிக்கையாகும். நீர் நிலைகளை அண்டிய வண்ணம் கணக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்படும். ஏனெனில், 24 மணி நேரத்தில் யானைகள் நீர் நிலைகளை நாடி வரும். இக்கணக்கெடுப்புக்கு வரண்ட காலநிலை உகந்ததாகும். குறித்த நடவடிக்கைக்காக நாங்கள் பௌர்ணமி தினத்தை தெரிவுசெய்துள்ளோம், ஏனெனில் கணக்கெடுப்புக்கு நிலா ஒளி அதிக நன்மை பயக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கணக்கெடுப்பிற்காக சுமார் 80 மில்லியன் ரூபா வரை செலவாகுமென்று வனஜீவராசிகள் திணைக்களம் கணக்கிட்டுள்ளது.


Recommended For You

About the Author: Ananya