ஆறாவது முறையாக சம்பியனாகும் முனைப்பில் ஃபெடரர்.

டென்னிஸ் உலகில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற பெருமைக்குரிய, சுவிஸ்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஆறாவது முறையாக அமெரிக்க பகிரங்க சம்பியன் கிண்ணத்தை வெல்லும் முனைப்பில் உள்ளார்.

ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர், நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற தொடர் இதுவென்பதால், அனைவரும் இத்தொடரில் சாதிக்க வேண்டுமென ஆர்வத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்பது குறித்து ஃபெடரர் கூறுகையில், ‘இந்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் பங்கேற்கிறேன். இதற்கான பயிற்சியில் கடந்த இரு தினங்களாக ஈடுபட்டு வருகிறேன். இது நான் 10 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் சம்பியன் பட்டம் வெல்லும் உத்வேகத்தை அளித்துள்ளது.

என் மீது நான் தேவையற்ற அழுத்தங்களை ஏற்படுத்திக்கொள்வதில்லை. இருப்பினும் இந்த தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கடந்த காலங்களை போன்று சம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடனும் நான் பங்கேற்கவில்லை. ஆனால் இந்த தொடரை எப்படி அணுக வேண்டும் என்ற போதிய திட்டமிடலுடன் கலந்துகொள்கிறேன். எனது ஆட்டத்திறனும் சிறப்பாக உள்ளது. கடந்த சில தொடர்களில் எனக்கு ஏற்பட்ட தோல்வி நன்மை தருவதாகவே அமைந்துவிட்டது.

ஏனென்றால், அது எனது ஆட்டத்தில் இருந்த தவறுகளை சுட்டிக்காட்டி விட்டது. அதிலும் கடந்த தோல்விகளால் நான் இம்முறை வெற்றிபெறுவேன் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் விம்பிள்டன் தொடரில் ரஃபேல் நடாலுக்கு எதிராக பெற்ற வெற்றி மறக்க முடியாதது. அதையடுத்து நடந்த இறுதிப்போட்டியில் நான் விளையாடிய விதமும் ஒழுங்காக அமைந்துள்ளது. அனைத்து சவால்களிலும் வெற்றிபெறுவோம் என நம்பிக்கையுடன் செயற்படுபவர்களில் நானும் ஒருவன்’ என கூறினார்.

கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 5 அமெரிக்க பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை ரோஜர் ஃபெடரர் வென்றுள்ளார்.

இறுதியாக 2009ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து 6ஆவது சம்பியன் பட்டத்தை சாதனை படைக்கும் வாய்ப்பை தவற விட்டார்.

ஆனால், இம்முறை 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆறாவது முறையாக அமெரிக்க பகிரங்க டென்னிஸ் சம்பியன் கிண்ணத்துக்கு முத்தமிடும் ஆர்வத்தில் ஃபெடரர் உள்ளார்.

38 வயதான ரோஜர் ஃபெடரர், இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இதில் ஆறு அவுஸ்ரேலிய பகிரங்க சம்பியன் பட்டங்கள், ஒரு பிரான்ஸ் பகிரங்க சம்பியன் பட்டம், எட்டு விம்பிள்டன் சம்பியன் பட்டங்கள், ஐந்து அமெரிக்க பகிரங்க சம்பியன் பட்டங்கள் அடங்கும்.

இந்த முறை ஃபெடரர் ஆறாவது முறையாக அமெரிக்க பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை வென்றால், அதிக முறை அமெரிக்க சம்பியன் பட்டத்தை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை அவர் பதிவு செய்வார்.


Recommended For You

About the Author: ஈழவன்