வெற்றியை நோக்கி இங்கிலாந்து.

இங்கிலாந்து – அவுஸ்ரேலிய அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே அவுஸ்ரேலிய 179 ஓட்டங்களையும் இங்கிலாந்து 67 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டன.

112 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆரம்பித்த அவுஸ்ரேலிய அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 171 ஓட்டங்களை குவித்திருந்தது.

இந்நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 246 ஓட்டங்களை குவித்தது.

முதல் இன்னிங்ஸ் போலவே இந்த இன்னிங்சிலும் அரைசதத்தோடு அதிகபட்ச ஓட்டங்களை பதிவு செய்த மார்னஸ் லபுஸ்சேன் 80 ஓட்டங்களில் (187 பந்து, 8 பவுண்டரி) ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

முன்னதாக ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய அதிவேக பவுன்சர் பந்து, லபுஸ்சேனின் ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த லபுஸ்சேன் சிகிச்சை எடுத்துக் கொண்டு தொடர்ந்து விளையாடினார்.

இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கட்டுக்களையும், ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட் தலா 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

இதையடுத்து, 359 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கினை நோக்கி இங்கிலாந்து அணி மிகுந்த நம்பிக்கையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது.

அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ரோரி பர்ன்ஸ் (7 ஓட்டங்கள்), ஜாசன் ரோய் (8 ஓட்டங்கள் ) நிலைக்கவில்லை. அடுத்து இறங்கிய ஜோ ரூட்டும், ஜோ டென்லியும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை 141 ஓட்டங்களாக உயர்ந்த போது, ஜோ டென்லி (50 ஓட்டங்கள்) பெவிலியன் திரும்பினார்.

மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 72 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களை குவித்துள்ளது. போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்