கடலோர பாதுகாப்பு பலமாக உள்ளது.

இலங்கையின் கரையோரப் பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை அடுத்து பயங்கரவாதிகள் நாட்டிற்குள் வருவதனையும், வெளியே தப்பித்துச் செல்வதனையும் தடுக்கும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை கடற்படை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் ஆறு உறுப்பினர்கள் இலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளதாக இந்திய மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால், தமிழகத்தின் கோவை உட்பட பல மாவட்டங்களில் பெரும் பதற்ற நிலலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த சூரிய பண்டார, “இலங்கையிலிருந்து பயங்கரவாதிகள் கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதற்கு வாய்ப்புக்கள் இல்லை. ஏனெனில் கடலோரத்தின் பாதுகாப்பு முன்னரை விடவும் ஏப்ரல்-21 குண்டுத் தாக்குதலின் பின்னர் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடற்படையினர் எந்த நேரத்திலும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே, இவ்வாறானதொரு நிலையில் கடல் மார்க்கமாகத் தப்பிச் செல்வதற்கு எந்த வாய்ப்புக்களும் இல்லை. பயங்கரவாதிகள் இந்தியாவினுள் நுழைந்துள்ளமை தொடர்பாக எத்தகைய உத்தியோகப்பூர்வ தகவலும் எமது உளவுத் துறையினருக்குக் கிடைக்கப் பெற்றதாகத் தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

இதேவேளை, புலனாய்வுத் தகவல்களுக்கு அமைய இவ்வாறாக இலங்கையிலிருந்து பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ளமை தொடர்பான தகவலை ஏற்றுக்கொள்ள முடியாது என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்