மது பழக்கத்தை குறைக்க உகண்டா புதிய திட்டம்!!

மதுபான விற்பனையினால் பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி உகண்டா நாட்டு அதிகாரிகள் சிறிய பைக்கற் மதுபானத்திற்கு தடை விதித்துள்ளனர்.

45% அளவுக்கு மதுசாரம் (அல்கஹோல்) உள்ள இந்த மதுபானங்கள் வருவாய் குறைவாக உள்ளவர்களால் அதிகமாக அருந்தப்பட்டு வருகின்றது.

இந்த பைக்கற் மதுபானத்தை பாடசாலை மாணவர்கள்கூட வாங்கி அருந்தும் சூழல் இருந்ததாக உகாண்டா வர்த்தகம் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமெலியா க்யம்பாதே தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமான மது உட்கொள்வோரைக் கொண்டுள்ள நாடுகளில் உகண்டாவும் ஒன்று என்று கவலைக்குரிய விடயமாகும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

உகண்டா மக்கள் தொகையில் 21% பேர் அளவுக்கும் அதிகமானோர் மதுவை உட்கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் தனது புள்ளிவிபரங்களில் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், மதுபான உற்பத்தியாளர்கள் எதிர்காலத்தில் 200 மில்லி லீற்றருக்கும் குறையாத அளவுள்ள போத்தல்களில் மாத்திரமே மதுவை அடைத்து விற்பனை செய்ய முடியும் என்று புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

உகண்டாவில் மது விற்பனைக்கென்று தனியாக எதுவும் கொள்கை மற்றும் கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில் இந்த முயற்சி அந்த நாட்டு மக்கள் மது அருந்துவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகவுள்ளது.

வீட்டில் தயாரிக்கப்படும் மதுவைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை நடைமுறைபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு கூறுகிறது.


Recommended For You

About the Author: Editor