இந்திய அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர், தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உறுதி செய்துள்ளது.

மேலும், இதற்கு முன்னதாக இருந்த பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் மற்றும் களத்தடுப்பு பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் ஆகியோர் தங்களது பணிகளை தொடருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் உடல்தகுதி நிபுணராக நிதின் பட்டேல் மீண்டும் நியமிக்கப்படுகிறார். மேற்கிந்திய தீவுகள் மண்ணில் இந்திய தூதரக அதிகாரிகளுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட இந்திய அணியின் நிர்வாக மேலாளர் சுனில் சுப்பிரமணியம் அந்த பொறுப்பில் இருந்து கழற்றி விடப்பட்டார். அவருக்கு பதிலாக அணியின் புதிய மேலாளராக கிரிஷ் டோங்ரே தேர்வாகிறார்.

இந்திய கிரிக்கெட் சபை தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் தெரிவு செய்யப்பட்டது குறித்து கூறுகையில்,

‘விக்ரம் ரதோருக்கு போதுமான அனுபவம் உள்ளது. பயிற்சியாளருக்குரிய அவரது திறமையில் எங்களுக்கு திருப்தி அளிக்கிறது’ என கூறினார்.

இந்திய அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான விக்ரம் ரத்தோர், இந்திய அணிக்காக 7 ஒரு நாள் போட்டியில் விளையாடி 193 ஓட்டங்களை பெற்றுள்ளார். 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 133 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

இவர், சர்வதேச போட்டிகளில் சாதிக்காவிட்டாலும் முதல்தர கிரிக்கெட்டில் 146 போட்டிகளில் விளையாடி 33 சதம் உள்பட 11,473 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

பஞ்சாப்பை சேர்ந்த 50 வயதான விக்ரம் ரதோர், முன்னாள் தேர்வுக்குழு தலைவரான சந்தீப் படேல், அடங்கிய தேர்வு குழுவில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இந்தியா அணி, உலகக்கிண்ண தொடரின் அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்ததால் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ரவிசாஸ்திரி உள்ளிட்ட பயிற்சியாளர் குழுவை மாற்ற அணி நிர்வாகம் தீர்மானித்தது.

இதற்கான விண்ணப்பங்களும் கோரப்பட்டன. இதில் பல இந்தியாவின் முன்னாள் வீரர்களும், வெளிநாட்டு பயிற்சியார்களும் விண்ணப்பித்தனர்.

எனினும், கடுமையான போட்டிக்கு மத்தியில் கபில்தேவ், கெய்க்வாட் , சாந்தா ரங்கசுவாமி அடங்கிய 3 பேர் கொண்ட குழு, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரி தேர்வு செய்தது.

இதனையடுத்து மீதமிருந்த துடுப்பாட்ட, பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு பயிற்சியாளர்களை தேர்வு செய்யும் பணியை தேர்வுக்குழு உறுப்பினர்கள் மேற்கொண்டு வந்தனர்.

இதில் துடுப்பாட்ட பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் 14 பேரிடம் நேர்காணல் செய்தனர். இதில் இருந்து மூன்று பேர் கொண்ட இறுதிப்பட்டியல் தயார் செய்யப்பட்டது. அதில் விக்ரம் ரத்தோர், சஞ்சய் பாங்கர், மார்க் ராம் பிரகாஷ் ஆகிய மூன்று பேர் இடம் பிடித்தனர்.

இதில், முன்னாள் சஞ்சய் பாங்கர் மற்றும் விக்ரம் ரத்தோர் ஆகியோருக்கிடையில் கடும் போட்டி நிலவியது. இறுதியில் விக்ரம் ரத்தோர் தெரிவுசெய்யப்பட்டார்.

பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்கு 12 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் இருந்து மூன்று பேர் கொண்ட இறுதிப்பட்டியலை தயார் செய்யப்பட்டது. அதில் பரத் அருண், பராஸ் பம்ப்ரே, வெங்கடேஷ் பிரசாத் ஆகிய மூன்று பேர் இடம் பிடித்தனர். இதில் மீண்டும் பரத் அருண் பயிற்சியாராக நியமிக்கப்பட்டார்.

களத்தடுப்பு பயிற்சியாளர் பதவிக்கு 9 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் இருந்து மூன்று பேர் கொண்ட இறுதிப்பட்டியல் தயார் செய்யப்பட்டது. இதில் ஆர் ஸ்ரீதர், அபேய் சர்மா, டி திலிப் ஆகிய மூன்று பேர் இடம் பிடித்தனர். இறுதியாக ஆர் ஸ்ரீதர் மீண்டும் பயிற்சியாராக நியமிக்கப்பட்டார்.


Recommended For You

About the Author: Editor