மெஸ்ஸியை புகழும் ரொனால்டோ!!

மெஸ்ஸி தான் தன்னை சிறந்த வீரராக உருவாக்கியதாக, போர்த்துக்கலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டீயானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

இந்த தலைமுறையின் தலைசிறந்த வீரர்களாக கருதப்படுபவர்கள் ஆர்ஜென்டீனாவின் லியோனல் மெஸ்ஸி, போர்த்துக்கலின் கிறிஸ்டீயானோ ரொனால்டோ.

இருவரும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதனை காட்டிலும், கழக அணிகளுக்காக விளையாடிய போது கடும் போட்டியுடன் விளையாடினர்.

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து தொடரில், மெஸ்ஸி பார்சிலோனா அணிக்கும், ரொனால்டோ ரியல் மெட்ரிட் அணிக்காகவும் விளையாடிய போது, இருவரும் கடும் போட்டியாளர்களாக பார்க்கப்பட்டனர். அத்தோடு இவர்கள் சாதனைகளையும் பறிமாற்றிக் கொண்டனர்.

பின்னர் ரொனால்டோ இத்தாலியின் ஜூவண்டஸ் அணிக்கு மாறினார். இதன்பிறகு இவர்களுக்கிடையிலான மோதல் குறைந்துவிட்டது.

ஆனால், ரொனால்டோ, மெஸ்ஸியை சீண்டும் வகையில் இத்தாலிக்கு வந்து தன்னுடன் போட்டி போடுமாறு சீண்டினார். இவ்வாறு இருவருக்கும் இடையில் அவ்அப்போது கருத்து மோதல்களும் இருப்பது உண்டு.

இந்த நிலையில், அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் வகையில், லியோனல் மெஸ்ஸி தான் தன்னை சிறந்த வீரராக உருவாக்கினார் என ரொனால்டோ கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நான் ரியல் மெட்ரிட் அணியில் இருந்து இத்தாலியின் ஜூவான்டஸ் அணிக்குச் செல்லும்போது மிகவும் ஏமாற்றம் அடைந்ததாக மெஸ்சி ஏற்கனவே சொல்லியிருக்கிறார். ஏனென்றால் எங்களுக்கு எதிராக கடும் போட்டி நிலவியது. அவரது பக்கத்தில் இருந்து வந்த இந்த கருத்தை நான் மிகவும் இரசிக்கிறேன்.

மெஸ்சி என்னை சிறந்த வீரராக உருவாக்கினார். அதேபோல் நானும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் விருதுகளையும், கிண்ணங்களையும் வெல்லும்போது அவருக்கு தேள் கொட்டியது போன்று இருக்கும். அவர் வெற்றி பெறும்போது எனக்கும் அதேபோல் இருக்கும்.

எங்களுக்கு இடையில் தொழில்முறையிலான தொடர்பு சிறப்பாக உள்ளது. ஏனென்றால் 15 வருடங்களாக கால்பந்து போட்டியில் விளையாடி வருகிறோம். நாங்கள் ஒருபோதும் இணைந்து இரவு உணவு சாப்பிட்டது கிடையாது. ஆனால், வருங்காலத்தில் இப்படித்தான் இருக்கும் என்பதை என்னால் பார்க்க முடியவில்லை. இதில் எந்த பிரச்சனையும் இருப்பதாக நான் பார்க்கவில்லை” என கூறினார்.

இதேவேளை, இரசிகர்கள் நன்மதிப்பு குறித்து கேள்வி எழுப்பும்போது, அது காயத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால், எனக்கு மிகப்பெரிய குடும்பம் உள்ளது. எனது மனைவி, அறிவார்ந்த குழந்தைகள் ஏராளமான விஷயங்களை புரிந்து கொண்டுள்ளனர்.

இதனால் நான் என்னுடைய வழக்கமானதை வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால், மீண்டும் ஒருமுறை என்னுடைய அப்பாவித்தனம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது என்னை பெருமைப்பட வைக்கிறது’ என கூறினார்

அண்மையில், அமெரிக்காவைச் சேர்ந்த மொடல் அழகி ஒருவர் ரொனால்டோவிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இதனால் அவர் கால்பந்து உலகில் காரசாரமான விவாத பொருளாக மாறினார்.

எனினும், அவர் இந்த குற்றச்சாட்டினை மறுத்ததோடு, பின்னர் அவர் மீது குற்றமில்லை என்பதும் நிரூபிக்கப்பட்டது.

அண்மையில் யு.இ.ஏ.எப். நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில், ரொனால்டோ தலைமையிலான போர்த்துக்கல் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.

அதேபோல, முதல்முறையாக இத்தாலியில் நடைபெறும் முக்கிய கால்பந்து தொடரான செர்ரி ஏ கால்பந்து தொடரில், ஜூவண்டஸ் அணிக்காக விளையாடிய ரொனால்டோ, இத்தொடரில் தனது முதல் ஆண்டிலேயே தொடரின் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டார்.

கால்பந்து உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் பலோன் டி’ஆர் விருதை, பரம எதிரிகளாக மோதும் இருவரும் தலா ஐந்து முறை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக 10 ஆண்டுகளாக வழங்கப்பட்ட பலோன் டி’ஆர் விருதை மெஸ்சியும், ரொனால்டோவும் மாறிமாறி வென்றுள்ளனர்.

லியனல் மெஸ்ஸி கடந்த 2009ஆம், 2010ஆம், 2011ஆம், 2012ஆம் மற்றும் 2015ஆம் ஆண்டுக்கான ‘பலோன் டி ஓர்’ விருதினை வென்றிருந்தார்.

அதேபோன்று 2008ஆம், 2013ஆம், 2014ஆம், 2016ஆம், 2017ஆம் ஆண்டுக்கான பலோன் டி ஓர் விருதினை கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor