தரமற்ற வீதி போடப்படுவதால் வவுனியா இளைஞர்கள் குழப்பம்!!

வவுனியா, தவசிகுளம், பிள்ளையார் வீதியில் இன்று காலை நீதி கேட்டு வீதியில் இறங்கிய இளைஞர்களினால் அவ்விடத்தில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் மூலம் மத்திய அரசாங்கத்திடம் இருந்து வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊடாக இரண்டு கோடியே இருபது லட்சம் ரூபா (2,200000) நிதியோதுக்கீட்டில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு சொந்தமான தவசிகுளம் பிள்ளையார் வீதி செப்பனிடும் பணி கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.

சுமார் 1.5 கிலோ மீற்றர் கல்லிட்டு தாரிடும் பணிகள் நிறைவுக்கு வந்த நிலையில் எஞ்சிய கற்களை நேற்றையதினம் இரவு ஒப்பந்தக்காரர் 11 டிப்பர் மூலம் வவுனியா மதவு வைத்தகுளம் பகுதியில் அமைந்துள்ள கல் ஆலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இதனையடுத்து நேற்றையதினம் இரவு அவ்விடத்தில் ஒன்று கூடிய தவசிகுளம் கிராமத்தினை சேர்ந்த இளைஞர்கள் மதவு வைத்தகுளம் பகுதியில் அமைந்துள்ள கல் ஆலைக்கு சென்று அவற்றை மீள எடுத்த இடத்திற்கு கொண்டு செல்லுமாறு கோரி கல் ஆலையினை முற்றுகையிட்டமையினால் 11 டிப்பர்கள் மூலம் மீள கற்கள் தவசிகுளத்திற்கு எடுத்து வரப்பட்டது.

இச் சம்பவம் நேற்றையதினம் இரவுடன் முடிவுக்கு வந்த நிலையில் இன்று (03.06) காலை வீதியினை செப்பனிடும் பணிகளை பார்வையிட வந்த ஒப்பந்தகாரர்களை தவசிகுளம் இளைஞர்கள் முற்றுகையிட்டு பொலிஸாருக்கு (119) தகவல் வழங்கினார்கள்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் கார்த்திகேசன் நத்தகுமாரன் அங்கிருந்த இளைஞர்களுடனும் ஒப்பந்தகாரர்களிடமும் கலந்துரையாடியதுடன் வவுனியா தெற்கு பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தரை வரவழைத்து வீதியில் தரத்தினை மதிப்பீடு செய்யுமாறு பணிப்புரை பிறப்பித்தார்.

சிறிது நேரத்தின் பின்னர் அவ்விடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஊடகங்களுக்கு இளைஞர்கள் கருத்து தெரிவிக்கையில்,

எமது வீதியினை செப்பனிடுவதற்கென எமது கிராமத்தில் குவிக்கப்பட்ட கற்கள் எவ்வாறு மிஞ்சும். ஒரு டிப்பர் கற்கள் மிஞ்சினால் பரவாயில்லை. 11 டிப்பர் கற்கள் மிகுதியாகவுள்ளது என்றால் எமது வீதி எந்த தரத்தில் போடப்பட்டுள்ளது என தெரியவில்லை.

எனவே மிகுதியுள்ள கற்களை எமது வீதிக்கே பயன்படுத்த வேண்டும். அத்துடன் இவ் வீதியில் போடப்பட்டுள்ள தாரினை கையால் கழற்ற முடிகின்றது. வீதி செப்பனிடும் பணியில் ஊழல் இடம்பெற்றுள்ளது. எனவே இவ் விடயத்தில் உரிய அதிகாரிகள் தலையிட்டு தீர்வினை பெற்றுத்தருமாறு தெரிவித்தனர்.

அப்பகுதி இளைஞர்களுக்கும், ஒப்பந்தகாரருக்கும் இடையில் முரண்டுபாடுகள் ஏற்பட்ட போது அவ்விடத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் சகோதரர் தன்னை அச்சுறுத்தியகாக அவ் வட்டாரத்தைச் சேர்ந்த பிரதேசபை உறுப்பினர் கா.நந்தகுமாரன் மாலை வவுனியா பொருளில் முறைப்பாடு ஒன்றினையும் செய்திருந்தார்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் சகோதரர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் வவுனியாவில் தவசிகுளம் பிள்ளையார் கோவில் வீதி, மறவன்குளம் வீதி, திருநாவற்குளம் வீதி, ஆண்டியாபுளியங்குளம் வீதி, ஹிச்சிராபுரம் வீதி என்பவற்றை உள்ளூராட்சி சபைகளிடம் இருந்து பெற்று வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊடாக மத்திய அரசின் நிதியைப் பெற்று புனரமைக்க பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் முயற்சிகளை மேற்கொண்டார்.

இதில் இவ் வீதிக்கும், ஆண்டியா புளியங்குளம் வீதிக்கும் திருத்த வேலைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் நடைபெறுகிறது.

அதனடிப்படையில், குறித்த தவசிகுளம் பிள்ளையார் கோவில் வீதியினை திருத்த வேலைக்காக பிரதேச சபையிடம் இருந்து வீதி அபிவிருத்தி அதிகாரசபை பெற்று உப ஒப்பந்த காரர் ஒருவரிடம் வழங்கியுள்ளனர். இதன்படி திருத்த வேலைகள் நடைபெற்றது.

அதில் முறைகேடு உள்ளதா, இல்லையா என்பதை தொழில்நுட்ப உத்தியோகத்தர்களே தீர்மானிக்க வேண்டும். ஆனால் அரசியல் காழ்புணர்ச்சியால் ஒப்பந்தகாரருடன் சிலர் முரண்பட்டனர்.

அவர் அழைத்தமைக்கு அமைவாக குறித்த இடத்திற்கு சென்று நிலமையை பார்வையிட்டேன். நான் யாருக்கும் அச்சுறுத்தல் விடவில்லை. அதன் உண்மை தன்மையை உரிய முறையில் அணுகி அறிந்து கொள்ள வேண்டும்.

அதைவிடுத்து அரசியலுக்காக அபிவிருத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த கூடாது. என்மீது செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு மாலை பொலிசில் வாக்குமூலம் வழங்கியுள்ளேன்.

நான் எவரையும் அச்சுறுத்தலில்லை. நாளை பிரதேச சபை குறித்த வீதி நிர்மாண பணியை பார்வையிடும். அதன்பின் உண்மை தெரியவரும் என்றார்.


Recommended For You

About the Author: Editor