விளையாட்டு சங்கங்களில் இவர்கள் பதவி வகிக்க முடியாது

 

விளையாட்டுத்துறை சட்ட விதிகளுக்கமைய சூதாட்ட புக்கி உரிமையாளர்கள் அவரது சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் உறவினர்கள் என எவரும் விளையாட்டுத்துறைச் சார்ந்த சங்கங்களில் பதவி வகிக்க முடியாது. அதற்கான வர்த்தமானி அறிவித்தல் பத்திரத்துக்கான எழுத்துமூல ஆவணத்தில் 21 ஆம் திகதியன்று கையெழுத்திட்டேன் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பு – 07 இல் உள்ள விளையாட்டுத் துறை அமைச்சின் மினி கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது  அவர் மேலும் கூறுகையில்,

“கணக்காய்வாளர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட மாதிரி கணக்காய்வு அறிக்கைக்கு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் (எஸ்.எல்.சி.) பதிலளிப்பதற்கான கால அவகாசம் இன்று 23 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

இதற்கு பதிலளிப்பதற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு ஆரம்பத்தில் 7 நாட்கள் கால அவகாசம் விடுத்திருந்தோம், எனினும், ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம், எங்களிடம் 21 நாள் கால அவகாசத்தை கேட்டிருந்தபோதிலும், மேலதிகமாக 7 நாட்களுக்கு நீட்டியிருந்தோம். அந்த வகையில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

இந்த கணக்கறிக்கைக்கு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் பதிலளித்தாலோ அல்லது பதிலளிக்காமல் விட்டாலோ கணக்காய்வாளர் திணைக்களத்தினால் என்னிடம் கையளிக்கப்படும் இறுதி கணக்கறிக்கையை பாராளுமன்றுக்கு சமர்ப்பிப்பேன்” என்றார்.

விளையாட்டுத்துறை சட்டவிதிகளுக்கமைய சூதாட்ட புக்கி உரிமையாளர்கள் உள்ளிட்ட அவர்களது உறவினர்கள் எவரும் விளையாட்டுச் சங்கங்களில் பதவி வகிக்க முடியாது என அமைச்சர் தெரிவித்தார்.

“விளையாட்டுத்துறை சட்ட விதிகளுக்கமைய சூதாட்ட புக்கி உரிமையாளர்கள் அவரது சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் உறவினர்கள் என எவரும் விளையாட்டுத்துறைச் சார்ந்த சங்கங்களில் பதவி வகிக்க முடியாது. அதற்கான வர்த்தமானி அறிவித்தல் பத்திரத்துக்கான எழுத்துமூல ஆவணத்தில் 21 ஆம் திகதியன்று கையெழுத்திட்டேன்”  என்றார்.


Recommended For You

About the Author: Ananya