தேசத்தின் ஹீரோவாக மாறிய மென்பொறியாளர்!!

வீட்டிற்கு செல்ல முடியாமல் பரிதவித்து நின்ற 32 காஷ்மீர் சிறுமிகளை ஒன்றாக திரட்டி அவர்களை பத்திரமாக வீடு சேர்த்த மென்பொறியாளருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு ஒரு தன்னாட்சி அடையாளத்தை வழங்கிய 370 வது சட்டப்பிரிவினை மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன் ரத்து செய்ததை அடுத்து, உள்ளூர் மக்களிடையே அனைத்துவிதமான தகவல்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன.

இணையம், தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி இணைப்புகளை துண்டித்து, மாநிலத்திற்கு வெளியே வசிக்கும் காஷ்மீர் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளவோ அல்லது வீடு திரும்பவோ முடியாத வகையில் இராணுவம் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனால் வெளிமாநிலங்களில் தங்கி படிக்கும் காஷ்மீர் சிறுமிகள் பலரும் தங்களுடைய குடும்பத்தினர் குறித்து பெரும் கவலையில் தவித்து வந்தனர்.

இந்த நிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி டெல்லியைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளர் ஹர்மிந்தர் சிங் அலுவாலியா, தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் நேரலை செய்தார். அதில், பாதுகாப்பற்றதாக உணரும் மாநிலத்திற்கு வெளியே உள்ள அனைத்து காஷ்மீரிகளும் என்னை தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள குருத்வாராக்களில் தஞ்சமடையலாம் என்று கூறியிருந்தார்.

இதனை பார்த்த ருகாயா என்கிற பெண் ஹர்மிந்தர் சிங்கை தொடர்பு கொண்டு, அரசாங்கத்தின் நகர்வுகள் காரணமாக வறிய குடும்பங்களைச் சேர்ந்த 32 காஷ்மீர் சிறுமிகள், வீடு திரும்புவதற்காகக் காத்திருக்கிறார்கள் என உதவி கேட்டுள்ளார்.

17 முதல் 22 வயதுக்குட்பட்ட அந்த சிறுமிகள் அனைவரும் நர்சிங் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு திட்டத்திற்காக புனேவில் இருந்தனர். அவர்கள் ஸ்ரீநகரை அடைந்த பின்னர் ராணுவத்தின் உதவி உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், முதலில் ஸ்ரீநகருக்குச் செல்ல அவர்களிடம் நிதி இல்லை.

இதைக் கேட்ட ஹர்மிந்தர் மற்றொரு பேஸ்புக் நேரலை மூலம் நன்கொடையாளர்களை நாடினார். உடனே ஒரு சீக்கிய தொழிலதிபர் அவரை தொடர்பு கொண்டு அந்த சிறுமிகள் மற்றும் நான்கு தன்னார்வாளர்களுக்கான விமான டிக்கெட்டுகளை நிதியுதவி செய்வதாக கூறியுள்ளார்.

அவரது முயற்சியால் பின்னர் சிறுமிகள் அவர்களுடைய குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தனர். இந்த செய்தி இணையத்தில் வெளியானதை அடுத்து, அவர்தான் ‘தேசத்தின் உண்மையான ஹீரோ’ என பலரும் புகழ்ந்து வருகின்றனர்.


Recommended For You

About the Author: Ananya