சிவனுக்கு அப்துல்கலாம் விருது!

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல் கலாம் விருதை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கௌரவித்தார்.

அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்துவிளங்குபவர்களுக்கு தமிழக அரசு சார்பில் அப்துல்கலாம் விருது கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான அப்துல்கலாம் விருது இஸ்ரோ தலைவர் சிவனுக்கு விஞ்ஞான ஆராய்ச்சியில் சிறப்பாக செயல்பட்டு வருவதற்காக அறிவிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றி தமிழக அரசு விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
ஆனால், அன்று வர இயலாத காரணத்தால், இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இஸ்ரோ தலைவர் சிவன் தலைமைச் செயலகத்தில் சந்தித்து விருது, காசோலையைப் பெற்றுக் கொண்டார்.

5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, 8 கிராம் தங்கபதக்கம், பாராட்டு பத்திரம் அவருக்கு வழங்கப்பட்டது.

இன்று (ஆகஸ்ட் 22) காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், “இஸ்ரோவில் ஆண்கள், பெண்கள் என்ற வித்தியாசம் இல்லை.

திறமையானவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. வருங்காலங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பெண்கள் தலைமை வகிக்க வாய்ப்பு உள்ளது.

நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-2 விண்கலம் செப்டம்பர் 7ஆம் தேதி அதிகாலை 1.40 மணிக்கு நிலவில் தரையிறங்குவதற்கான முயற்சியை ஆரம்பிக்கும்” என்று கூறியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor