23ம் திகதி பிரதமராக பதவியேற்கிறார் சஜித்?

சஜித் பிரேமதாசா எதிர்வரும் 23ம் திகதி பிரதமராக பதவியேற்கவுள்ளார் என்ற தகவல் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக உலாவி வருகிறது.

கடந்தவாரம் சஜித் பிரதமராக பதவியேற்கவுள்ளார் என்றும், பின்னர் சுபநேரம் அமையாததால் பதவியேற்கவில்லையென்றும் தகவல் பரவிய நிலையில், தற்போது இந்த தகவல் பரவி வருகிறது.

சஜித் ஆதரவு அணியின் முக்கியஸ்தரான அமைச்சர் அஜித் பி பெரேரா நேற்று பேஸ்புக்கில் இட்ட பதிவு இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.

அஜித் பி பெரேராவின் பதிவில், 97 /123= 78.86% என குறிப்பிடப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசின் வீழ்ச்சிக்கு பின்னர் ஐ.தே.கவினால் அமைக்கப்பட்ட அரசாங்கத்திற்கு 123 எம்.பிக்களின் ஆதரவிருந்தது.

அவர்களில் 97 பேர் சஜித்திற்கு தமது ஆதரவை உறுதிசெய்துள்ளனர் என்பதே, அஜித் பெரேராவின் கணக்கு.

இதேவேளை, சிங்கள அரசியல் ஆய்வாளர் ஹரிந்திர திசநாயக்க, இந்த கணக்கு குறித்த சில விளக்கங்களுடன், சஜித் பிரதமராக நியமிக்கப்பட வாய்ப்புண்டு என்ற தகவலையும் வெளியிட்டுள்ளார்.

தற்போதைய அரசிற்கு ஆதரவான 123 உறுப்பினர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்களின் தொகையான 62 உறுப்பினர்களின் ஆதரவை சஜித் பெற்றால் அவரை பிரதமராக ஜனாதிபதியால் நியமிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் இதே போன்ற சம்பவங்கள் நடந்ததை உதாரணமாக காட்டியுள்ளார்.

இதன்படி, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து அகற்ற வாய்ப்பொன்று ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, ஏற்கனவே இரண்டு சந்தர்ப்பங்களில் சஜித்தை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி உறுதியளித்திருந்தபோதும், சஜித் அப்போது அதனை நிராகரித்திருந்தார்.

சஜித்திற்கு தொடரும் முட்டுக்கட்டை

இதேவேளை, சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்காமல் தடுப்பதில் ரணில் ஆதரவு ஐ.தே.க தலைமைய கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளது.

நாடாளுமன்ற குழு, செயற்குழுவை ஒரே சமயத்தில் கூட்டி வேட்பாளரை தெரிவு செய்யும்படி சஜித் தரப்பு வலியுறுத்தி வர, ஐ.தே.க செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் நேற்று வேறு தகவல்களை வெளியிட்டார்.

வேட்பாளரை செயற்குழுவே தேர்வு செய்யும், ஆனால் வாக்கெடுப்பின் மூலம் அவர் தேர்வாகமாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

கட்சிக்குள் சஜித் ஆதரவு அதிகரித்துள்ள நிலையில், அவரை தடுப்பதற்கே இந்த உத்தி பயன்படுத்தப்படுவதாக கருதப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor