தூத்துக்குடி வீரருக்கு அர்ஜுனா விருது!

விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டுக்கான விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி முகுந்தகம் ஷர்மா தலைமையில் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், முன்னாள் நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு ஜார்ஜ், பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா உள்பட 12 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 16, 17ஆம் தேதிகளில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த கமிட்டி விருதுக்கு தகுதியான வீரர்களின் பட்டியலை தயார் செய்து அனுப்பியது. இதன் தொடர்ச்சியாக தற்போது அர்ஜுனா விருது பெறும் வீரர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அர்ஜுனா விருது பெறவுள்ளார். விமல் குமார் (பேட் மிண்டன்), சந்தீப் குப்தா (டேபிள் டென்னிஸ்), மொகந்தர் சிங் (தடகளம்), ஆகியோருக்கு துரோணாச்சாரியா விருது அறிவிக்கப்பட்டுள்ளன.

வாழ்நாள் சாதனையாளர் விருது மெஸ்பான் படேல் (ஹாக்கி), சஞ்சய் பரத்வாஜ் (கிரிக்கெட்) ரம்பீர் சிங் (கபடி) ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த உடற்கட்டு (Bodybuilding) விளையாட்டு வீரர் எஸ்.பாஸ்கரன் பெயரும் இடம்பெற்றுள்ளது. விளையாட்டுத்துறையில் இந்த ஆண்டு தேசிய விருது பெறும் ஒரே தமிழக வீரர் என்ற பெருமையும் பாஸ்கரனுக்கு கிடைக்கிறது.

65 கிலோ எடைப்பிரிவில் உலக உடற்கட்டு வீரர் பட்டம் வென்றவர். 60 கிலோ எடைப்பிரிவில் ஆசியா உடற்கட்டு வீரர், அதற்கு முன்னதாக ஐந்து முறை இந்திய உடற்கட்டு வீரர் (Mr. World, Mr.Asia, Mr.India) பட்டங்களை வென்றவர்.

கடந்த 2008ஆம் ஆண்டில் தமிழ்நாடு உடற்கட்டு வீரர் (ஆணழகன்) பட்டம் வென்றவர். பன்னாட்டுப் போட்டிகளில் தமிழக அணி வீரராகவும், இந்திய அணி வீரராகவும் களம் கண்டவர்.

41 வயது பாஸ்கரனுக்கு, மகாகவி பாரதி பிறந்த தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் சொந்த ஊர். சென்னை ஐ.சி.எஃப் நிறுவனத்தில் 2010 முதல் பணியாற்றுகிறார். பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.

மூன்று சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் உள்ளனர். சென்னையில் அரசுப் பள்ளியில் தன் வாழ்க்கையைத் தொடங்கி விளையாட்டின் மீதான ஆர்வத்தில் இருபது ஆண்டுகளாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வந்துள்ளார்.

தனக்கு கிடைக்கப் போகும் அர்ஜுனா விருது தமிழக இளைஞர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும் என்று உடற்கட்டு வீரர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். பாடி பில்டிங் வீரர்களுக்கு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கவேண்டும், போட்டிகளில் பங்கேற்கும் முன்பாகவே வீரர்களை ஊக்கப்படுத்த அரசு முன்வரவேண்டும்.

மத்திய அரசு விருது அறிவித்தது போல, மாநில அரசும் பாடி பில்டிங் வீரர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்றும் அர்ஜுனா விருதுக்கு தேர்வான பாஸ்கரன் கோரிக்கை வைத்துள்ளார். ஆணழகன் போட்டி என்று கடந்து போகும் விளையாட்டு இனி கவனம் பெறும் என்றும் நம்புகிறார் பாஸ்கரன்.

இதற்கு முன்னதாக 1999ஆம் ஆண்டில் உடற்கட்டு வீரர் டி.வி.பெளலி அர்ஜுனா விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor