
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பட்டை பகுதியில் நீரில் மூழ்கி காணமல் போயிருந்த இளைஞரொருவர் செவ்வாய்க்கிழமை நண்பகல் அக்கரைப்பற்று தம்பட்டை விளையாட்டு மைதானத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இதன் போது அக்கரைப்பற்று கோளாவில் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய கமலநாதன் நிசாப் ஜோஜ் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திங்கட்கிழமை தம்பட்டை பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள கடற்பரப்பில் நீராடுவதற்காக ஆறு இளைஞர்கள் சென்றுள்ளனர்.
இந்நிலையில் அவர்களில் ஒருவர் கடலலையில் அடித்துச்செல்லப்பட்டுள்ளார். ஏனைய நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். இருப்பினும் அவரை காப்பாற்ற இயலாது போயுள்ளது.
அதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில் அப்பகுதிக்கு விரைந்த திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையிலான பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
அதே வேளை காணாமல்போன இளைஞரை தேடும் நடவடிக்கையினையும் பொலிசாரும் பிரதேசவாசிகளும் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.
இருப்பினும் திங்கட்கிழமை மாலை வரையில் காணாமல் போயிருந்த இளைஞரை கண்டு பிடிக்க முடியவில்லை .இந்நிலையிலேயே குறித்த இளைஞன் செவ்வய்க்கிழமை நண்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த இளைஞர்கள் ஆறு பேரும் நண்பர்கள் என்பதுடன் தம்பட்டை பகுதியில் அமைந்துள்ள உறவினரின் வீட்டிற்கு சென்ற நிலையில் கடலில் நீராடச் சென்றுள்ள போதே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது