
தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் ஹாசீமின் மனைவி அப்துல் காதர் பாதிமா ஹாதியாவிடம் மீண்டும் இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பிரசன்னமாகிய அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
தற்கொலைக் குண்டுதாரிகளான சஹ்ரான் மற்றும் மொஹமட் இப்றாஹிம் இல்ஹாம் அஹமட் ஆகிய இருவரின் மரண விசாரணைகளின் சாட்சி விசாரணைகள் நீதவான் முன்னிலையில் இடம்பெற்றபோதே அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் கடந்த 15ஆம் திகதி சஹ்ரான் ஹாசீமின் மனைவி அப்துல் காதர் பாதிமா ஹாதியா கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர், சாய்ந்தமருதில் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சமரில் சஹ்ரானின் உறவினர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.
இதன்போது சஹ்ரானின் மனைவி மற்றும் அவரது மகள் ஆகியோரை காயமடைந்த நிலையில் படையினர் மீட்டிருந்தனர்.
அதன்பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர்கள், நீதிமன்ற உத்தரவுக்கமைய தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.