விக்கிக்கு அடுத்து அனந்தி ஆப்பபு தயாராகின்றார் டெனீஸ்வரன்.

முன்னாள் பிரதம நீதியரசர் விக்கினேஸ்வரனை நீதிமன்றை அவமதித்த குற்றவாளியாக்கியுள்ள வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் , புலிகளின் தளபதிகளில் ஒருவரான எழிலனின் மனைவிக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடரவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி அவதூறு ஏற்படுத்தியமை தொடர்பில் அனந்திக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிற்கு எதிரான நீதிமன்ற வழக்கு தொடர்பில் ஊடகவியலாளர் இன்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தன்னை அமைச்சரவையில் இருந்து நீக்கியமை தொடர்பில் முதலமைச்சருக்கு எதிரான முறைப்பாட்டுக்கு இறுதித் தீர்ப்பு வந்திருக்கிறது. முதலமைச்சரால் விசாரணைக்குழு அமைத்த பின்னர் 2016ம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி தன்மீது முதன் முதல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெலி ஓயாப் பகுதியில் இருக்கின்ற சிங்கள குடும்பங்கள் வாழும் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் மீன்குஞ்சு விடப்பட்டமையில் மோசடி செய்ததாகவும், வீதி அபிவிருத்தி நடவடிக்கைளில் பஸ் தரிப்பிடம் அமைக்கும் போது மோசடி இடம்பெற்றதாகவும், மாவீரர் போரளிகளுக்கான வேலைத்திட்டத்தில் ஊழல் நடந்ததாகவும் அனந்தி சசிதரன் தம்மீது குற்றம் சுமத்தியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அந்த விசாரணைக்கு சென்றபோது தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கான அனைத்து பதில்களையும் வழங்கியிருந்தேன்என்றும் அவர் கூறியுள்ளார்.

மீன்பிடி அமைச்சுக்கு வருடம் தோறும் 30 மில்லியன் தொடக்கம் நிதி ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், அதில் 5- 6 இலட்சம் ரூபாய் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கின்ற சிங்கள கிராமத்திற்கு வழங்கியதாகவும், குறித்த சிங்கள குடும்பங்கள் எமது வடமாகாணத்தில் இருக்கின்ற மக்கள். நான் வடமாகாணத்தில் இருக்கின்ற மூவின மக்களுக்கும் அமைச்சர் என்றும் அவர் கூறியுள்ளார்.

எமது மாகாணத்தில் சிறுபான்மையாக சிங்கள மக்கள் இருக்கின்ற ஒரு மாவட்டத்தில் ஒரு 100 தொட்க்கம் 200 பேர் வரையில் சிங்கள மக்கள் வசிக்கும் நிலையில் அந்த கிராமத்திற்கு நான் உதவி செய்யக் கூடாது எனில், மத்திய அரசாங்கம் வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ உதவி செய்யவில்லை என்று எப்படி கேட்க முடியும் எனவும் டெனீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

தம்மீது சுமத்தப்பட்ட குறித்த குற்றச்சாட்டுகளிற்கு விசாரணை குழுவில் தான் சரியான விளக்கம் கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தாம் விளக்கமளித்த பின்னரும் தனக்கு எதிரான பாரதூரமான குற்றச்சாட்டுக்களை கொடுத்த அனந்தி சசிதரன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இந்தநிலையில், அடுத்த ஒரு வழக்கு அனந்தி சசிதரனுக்கு எதிராக தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனந்தி சசிதரன் செய்த முறைப்பாடு பொய் என்பதை விசாரணை குழு தெரிவித்துள்ள நிலையில் முடிந்தால் அனந்தி சசிதரன் அந்த வழக்கில் வென்று காட்டட்டும் என்றும் டெனீஸ்வரன் சவால் விடுத்துள்ளார்


Recommended For You

About the Author: Editor