இரத்த கண்டல் (Contusion)- RICE சிகிச்சை

இரத்த கண்டல் (contusion)- RICE சிகிச்சை
இந்த 65 வயதளவுப் பெண்மணியின் முகத்தைப் பார்த்தவுடன் பரிதாபமாக மட்டுமின்றி பயமாகவும் இருக்கும்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் வீட்டில் விழுந்துவிட்டார். இசகு பிசகாக அடிபட்டதில் முகத்திலும் இடது கையிலும் நெஞ்சாங் கூட்டிலும் பலமாக அடிபட்டுவிட்டது.

கண் இமைக்கு மேல் உள்ள வீக்கத்தை அவதானித்து இருப்பீர்கள். அங்கு தான் முதலில் கண்டல் இருந்திருக்கும். கண்டிய இரத்தம் கீழ் நோக்கி நகர கண்ணைச் சுற்றியும் சொக்குப் பகுதியிலும் கருமை படர்ந்து விட்டது.

சரி நீங்கள் விழுந்து அடிபட்டால் அல்லது இரத்தம் கண்டினால் என்ன செய்வீர்கள்?
மசாஜ் பண்ணலாமா வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாமா?
இரண்டுமே தவறு. அவை மேலும் இரத்தக் கசிவைத் தூண்டி கண்டலை மோசமாக்கி விடும்.
அப்படியானால் செய்ய வேண்டிய முதல் உதவிகள் எவை.
ஓய்வு கொடுங்கள். அடிபட்ட இடத்தை கசக்கி மசாஜ் பண்ணி நிலமையை மோசமாக்காமல் ஓய்வு (rest) கொடுங்கள். கூடுயளவு ஆட்டி அசைக்காமல் வைத்திருங்கள்.
இரண்டாவதாக ஜஸ் (Ice) வையுங்கள். கண்டல் இடத்தின் மேலாக. உட்புறமாக மேலும் இரத்தம் கசிந்து கண்டல் மோசமாவதைத் தடுக்கும்.

கண்டிய இடத்தைச் சுற்றி இறுக்கமாக பண்டேஜ் கட்டுப் போடுங்கள். இதை compression என மருத்துவத்தில் கூறுவார்கள். இதுவும் மேலும் இரத்தக் கசிவு ஏற்படுவதை தடுக்கும். இது 3வது ஸ்டெப்.

அவருக்கு முழங்கைக்கு கீழாகவும் மற்றொரு கண்டல் இருந்தது
ஆயினும் பண்டேஜ் கட்டானது மிக இறுக்கமாக இருக்கக்கூடாது. ஏனெனில் அதிகமாக இறுக்கமானால் இரத்த ஓட்டம் தடைப்படும் ஆபத்து உள்ளது. டொக்டர் Ragunathan MK எழதிய comment யை பாருங்கள்.
நான்காவதாக கண்டிய இடத்தை கீழே தொங்கவிடாது உயர்த்துங்கள். முக்கியமாக இருதயத்தை விட உயர்த்தி பிடித்தாலும் கண்டால் மோசமடையாது தடுக்கும். இது elevation எனப்படும்.
இந்த முதல் உதவி முறையை மறந்து விடாதிருக்க RICE என்ற சொல்லை ஞாபகத்தில் வைத்திருங்கள். RICE என்றால் அரசி அல்ல.

Rest, Ice, Compression, Elevation என்ற ஆங்கில சொற்களின் முதல் எழுத்துக்களை ஒன்று சேர்த்ததால் உருவாகியதுதான் இந்த RICE.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
M.B.B.S (Cey); D.F.M (Col), F.C.G.P (Col)
குடும்ப மருத்துவர்

Recommended For You

About the Author: Editor