ஐநா நோக்கிய தமிழின நீதி கோரும் நடைப்பயணம்!

உறவுகளே – எமது தமிழீழ தாயக விடுதலைப் போராட்டம் 1948ல் இருந்து மெல்ல மெல்ல கருக்கொண்டு சாத்வீக வழியிலும் பின் இரத்தம் சிந்தி உயிர்கொடுத்து போராடும் உன்னதமான வடிவிலும் என பல பரிமாணங்களை கடந்து சுயாட்சியை நடத்தக்கூடிய வல்லமையை நிழல் அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்பி அதையும் சர்வதேசத்தின் கண் முன் காட்டி ஒரு தனி நாட்டுக்கான அத்தனை அடையாளங்களோடும் சிங்கள பேரினவாத அரசாங்கத்தோடும் ஏனைய தரப்புக்களோடும் மூன்றாம் தரப்பு சர்வதேச மத்தியஸ்த்தத்துடன் பேச்சுவார்த்தை மேசைகளில் அமர்ந்து பேரம் பேசக்கூடிய நிலையை அடைந்த ஒரு தருணத்தில்தான் சிறீலங்கா அரசாங்கம் சர்வதேசத்தோடு சேர்ந்து பின்னிய சதிவலையில் சிக்குண்டு முள்ளிவாய்க்காலில் மௌமாகிப்போனது.

ஆயினும் அந்த உன்னத போராட்டம் முள்ளிவாய்க்காலில் சிந்தப்பட்ட கொல்லப்பட்ட தமிழ் இன ஆத்மாவாக சர்வதேசத்தில் பேசுகின்ற குரலை விட்டுச்சென்றுள்ளது,

எவ்வாறு இன்று காஸ்மீரில் 370 சிறப்பு அந்தஸ்த்து சட்டம் பறிக்கப்பட்டபோது அது ஐநாவின் பாதுக்காப்பு சபை வரை ஒலிக்கும் வல்லமை கொண்டிருந்ததோ அது போன்றதொரு நிலைக்கான வாசலை ஈழத்தமிழர்களின் குரல்கள் அடைந்த போதும் அதை நிலத்திலும் புலத்திலும் ஈழத்தமிழர்களிடையே காணப்படுகின்ற ஒற்றுமையற்ற ராஜதந்திர வறுமை நிலைமை பின்னடைவுகளை சோர்வுத்தன்மையையும் இன்று எமது விடுதலை போராட்டத்தின் பாதையில் விதைத்துள்ளது.

இந்த நிலைமையினை உணர்ந்து கொள்வது நிலத்திலும் புலத்திலும் ஈழத்தமிழர்களுக்கு அவசியம்.தொடர்ந்து எமது கோரிக்கைகள் வலுவிழந்து போகாமல் முன்வைப்பது அவசியம். எமது ஈழ விடுதலையின் அபிலாசைகளை வருசத்துக்கு வருசமும் மாதத்துக்கு மாதமும் மாற்றுகின்ற பசப்பு அரசியலுக்குள் அடகு வைக்க முடியாது.

அதைகடந்த தூரநோக்குடனும் வேகத்துடனும் நாம் செயற்படுவது அவசியம்.அதற்கான ஒரு தருணமாயும் ஐநா நோக்கிய தமிழின நீதி கோரும் நடைப்பயணத்தை சர்வதேச கவனத்தை ஈர்க்கும் பொருட்டு பயன்படுத்துவதும் அதில் இணைந்து பயணிப்பதும் கடமை என்பதை தயவு செய்து மறவாதீர்கள்.


Recommended For You

About the Author: Editor