யாழில் அதிகரிக்கும் தென்னிலங்கையர்களின் அட்டகாசம்!

பருத்தித்துறை கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக இன்று ஆளுனர் அலுவலகத்துக்கு முன்னால் ஆர்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இது குறித்து பல்வேறுபட்ட தரப்பினரிடம் முறைப்பாடு செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பருத்தித்துறை கடற்றொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண மீனவர்களுக்கும் தென்னிலங்கை மீனவர்களுக்கும் இடையில் நேற்று முன்தினம் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதுடன், பொலிஸாரும் பாராமுகமாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி கடலட்டை பிடிப்பில் ஈடுப்பட்ட தென்னிலங்கை மீனவர்களுக்கும் பிரதேச மீனவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒருவர் நேற்று விடுதலை செய்யப்பட்டார். ஏனைய ஐந்து பேரும் ஆறு பேர் கொண்ட சரீர பிணையில் இன்று நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.

மோதலுடன் தொடர்புடையவர்கள் என 16 பேரின் பெயர் பட்டியலை பொலிஸார், பருத்தித்துறை கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவரிடம் கையளித்துள்ளனர். அவர்களில் இருவர் இன்று பகல் 11 மணியளவில் சரணடைந்திருந்தனர். எனினும் அவர்கள் இதுவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவில்லை. பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பருத்தித்துறை கடற்றொழிலாளர்கள் கருத்து வெளியிடுகையில்,

மன்னார், சிலாபம், புத்தளம், முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் தென்னிலங்கை சேர்ந்த சுழியோடி கடலட்டை பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. எனினும் கடந்த இரண்டு மாதங்களாக தென்னிலங்கை மீனவர்கள் எமது கடற்பரப்பில் அத்துமீறி கடலட்டைகளை பிடித்து வருகின்றனர். அத்துடன் எமது வலைகளை வெட்டி சேதப்படுத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் 23 ஆம் திகதி எங்கள் கண் முன்னால் வலைகளை வெட்டி கடலட்டைகளை பிடித்துகொண்டிருந்த போது கடலட்டைகளுடன் ஒன்பது படகுகளை சேர்ந்த 26 பேரை பிடித்து பொலிஸாரிடம் கையளித்திருந்தோம். பொலிஸார் எச்சரிக்கை செய்து அவர்களை அனுப்பியிருந்தனர். எனினும் அடுத்தநாளே அவர்கள் மீண்டும் எமது கடற்பகுதியில் அத்துமீறி கடலட்டை பிடித்தனர்.

இது தொடர்பாக கடற்றொழில் அமைச்சு , கடற்றொழிலாளர் சம்மேளனம் கடற்றொழில் நீரியியல் வள திணைக்களம் மற்றும் ஆளுனர் அலுவலகத்திற்கும் கடிதங்களை அனுப்பியிருந்தோம். எனினும் எந்த பலனும் கிட்டவில்லை. அதேவேளை நேற்று இடம்பெற்ற மோதல் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுடன் தொடர்பு கொண்டோம். இதோ வருகின்றோம் என்கிறார்கள் ஆனால் எவரும் வந்தபாடு இலலை.

தற்போது நாம் நாளை ஆளுனர் அலுவலகத்துக்கு முன்னால் ஆர்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர் மானித்துள்ளோம். நாம் அரசியல்வாதிகளை நம்பி பிரியோசனம். இல்லை. எமது வாழ்வாதரத்தை தக்க வைக்க நாம் போராடியாக வேண்டும் என பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்


Recommended For You

About the Author: Editor