குப்பைகளை கொண்டு செல்ல பாதுகாப்பு கோரி கடிதம்

கொழும்பிலிருந்து குப்பைகளைக் கொண்டுசெல்லும்போது, உரிய பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபை, பொலிஸ்மா அதிபரிடம் இந்த கோரிக்கையை  முன்வைத்துள்ளது.

இதற்கான கடிதத்தை நேற்று (திங்கட்கிழமை) பதில் பொலிஸ் மா அதிபரிடம் கையளித்துள்ளதாக மாநாகர சபை ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார்.

குப்பைகளைக் கொண்டுசெல்லும்போது, இடைக்கிடையே ஏற்படும் தடைகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குப்பைகளைக் கொண்டுசெல்லும் மார்க்கங்களிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் விசேட பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் கொழும்பிலிருந்து குப்பைகளை ரயில் ஊடாக அருவக்காட்டு கழிவகற்றல் தொகுதிக்கு கொண்டுசெல்லும் திட்டம் எதிர்வரும் சனிக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, குப்பைகளைக் கொண்டுசெல்லும் ரயில்கள் மற்றும் மார்க்கங்கள் தொடர்பாக ஆராய்வதாக அந்த திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள குப்பைகளை கெரவலப்பிட்டிய குப்பைமேட்டில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், குப்பைகளை கொட்டுவதில் சிரமம் ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து புத்தளம் அருவக்காட்டில் குப்பைகளைக் கொட்டுவதற்கு கொழும்பு மாநகர சபைக்கு தடையின்றி இடமளிக்குமாறு, வனாத்தவில்லு பிரதேச சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதற்கிணங்க, கொழும்பு நகர சபை குப்பைகளை அகற்றும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. எனினும் அருவக்காடு பகுதிக்கு குப்பைகளை கொண்டுசெல்வதற்கு மக்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்ததுடன், குப்பை ஏற்றிச் சென்ற வண்டிகளும் தொடர்ச்சியாக திருப்பி அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்