சக நோயாளிகளை அடித்தக்கொன்ற நோயாளி

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ருமேனியாவில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளர் ஒருவர் சக நோயாளிகளை தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தமை அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ருமேனியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சபோகா நகரில் தனியாருக்கு சொந்தமான (Sapoca psychiatric hospital) மனநல மருத்துவமனை ஒன்றில் நேற்று (திங்கட்கிழமை) மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 15-ஆம் திகதி 38 வயதான ஒருவர் போதைப்பொருள் பாவனையில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சுயமாகவே மருத்துவமனைக்கு வந்தார்.

மன நலம் பாதிக்கப்பட்டிருந்த முதியவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் குறித்த நபர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து அந்த நபர் திடீரென மருத்துவமனையில் குழப்பத்தில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் அவர் நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றுவதற்காக பயன்படுத்தப்படும் நீளமான இரும்புத் தாக்கியை கொண்டு சக நோயாளிகளை சரமாரியாக தாக்கினார்.

இதில் 60 வயதுக்கு மேற்பட்ட நான்கு நோயாளிகள் தலையில் தாக்கப்பட்டு படுக்கையில் இருந்தபடியே உயிரிழந்தனர்.

அத்துடன் 9 பேர் வரை பலத்த காயம் அடைந்துள்ளனர். அவர்களில் 2 பேர் கோமா நிலைக்கு சென்றதாகவும், மற்றைய 7 பேரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் மருத்துவமனைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, நோயாளிகளை கொலை செய்துவிட்டு தப்பியோட முனைந்த சந்தேகநபரை சில மணி நேரத்தில் பொலிஸார் கைது செய்தனர். அவரிடம் இந்த தாக்குதல் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


Recommended For You

About the Author: ஈழவன்