நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல இராணுவ பாதுகாப்பு மட்டும் போதாது

இராணுவப் பாதுகாப்புடன் மாத்திரம் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியானெத் தெரிவித்துள்ள வீடமைப்பு, கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ, சமாதானம், அபிவிருத்தியுடனான நாட்டை உருவாக்குவதற்காக, இராணுவப் பாதுகாப்புடன் பொருளாதாரம், சமூகம், அரசியல் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள சகல பிரிவுகளையும் பாதுகாப்பதற்கான தகுதி தன்னிடம் இருப்பதுடன் நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தான் தயாராகவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் “ஸ்ரீமத் அலுவிஹாரகம” வீடமைப்புத் திட்டத்தை, இன்று (19) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், 1971, 1987, 1988ஆம் ஆண்டுகளில், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டதால், பொருளாதார பாதுகாப்பு மக்களுக்குக் கிடைக்காமையின் பலனாக பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு, நாட்டில் புரட்சிகள் ஏற்பட்டதுடன் இதனால், தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்ததாகச் சுட்டிக்காட்டியதோடு, மக்களின் உரிமைகள், பிரச்சினைகள், வலிகளை அறிவிக்கும் உரிமையை இழக்கும்போது, தேசிய பாதுகாப்புக்கு எவ்வகையான அச்சுறுத்தல் ஏற்படுமென நன்றாக அறிந்துக்கொள்ளலாம் என்றார்.

கடந்தகால ஆட்சியில், இந்த நாட்டின் பாதுகாப்புப் பிரிவு, நகரசபையின் குப்பைகளை அகற்றும் ஆட்களாக நியமிக்கப்பட்டு, அவர்களின் கௌரவத்துக்கு இழுக்கை ஏற்படுத்தியதாகவும் தன்னுடைய ஆட்சியின் கீழ், பாதுகாப்புப் பிரிவை கௌரவமிக்கதாக மாற்றவுள்ளதாகவும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்காலத்தில் பெண்களின் அடிப்படை பொருளாதார கொள்கைகள் கொண்ட நாட்டை உருவாக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

நவம்பர் மாதத்தில் மக்கள் பெற்றுத்தரும் வரத்துடன், பெண்களை சேமிப்பு தொடர்பான விடயத்தில் ஈடுபடுத்தி, நாட்டின் அபிவிருத்திகளைப் பலப்படுத்த உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்