தான்சானியா எரிபொருள் தாங்கி விபத்து – உயிரிழப்பு 95ஆக உயர்வு.

தான்சானியாவில் எரிபொருள் தாங்கி ஒன்று கவிழ்ந்து தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்றளவில் 95 ஆக உயர்ந்துள்ளது.

டொடோமா நகருக்கு 160 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள மொரகரோ நகரில் இந்த சம்பவம் கடந்த 10-ம் திகதி இடம்பெற்றது.

பெட்ரோலை ஏற்றி சென்ற பாரவூர்தி ஒன்று திடீரென வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதனையடுத்து எரிபொருள் தாங்கியில் இருந்த பெட்ரோல் தரையில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் பிரதேச மக்கள், வீதியில் சிந்திய பெட்ரோலை பாத்திரங்களில் சேகரிக்க முயற்சித்தனர். அப்போது எரிபொருள் தாங்கி தீப்பற்றி எரிய தொடங்கியது. பலர் தீச்சுவாலையில் சிக்கி உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து தான்சானிய ஜனாதிபதி ஜோன் மகுஃபுலி (John Magufuli), 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். காயமடைந்தவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

கடந்த சனிக்கிழமை வரை 94 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 20 பேர் முஹிம்பிலி தேசிய மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்