
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் புகலிடங்கள் அடியோடு அழிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் அஷ்ரப் கனி உறுதியாக தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று முன்தினம் திருமண நிகழ்வில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த ஆப்கான் பிரதமர், காபூல் திருமண சம்பவம் மிகவும் கொடூரமான ஒன்றாகும். உயிரிழந்த மக்களுக்கு அரசு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது எனக்கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ள நிலையில், இந்தப் பயங்கரவாதத் தாக்குலுக்கு ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய உள்ளூர் அமைப்பே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, ஆப்கான் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
கடந்த 18 வருடங்களாக தாங்கள் பாதிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டும் மக்கள், அமெரிக்க – தலிபான் அமைதி பேச்சுவார்த்தை மூலம் இதனை முடிவுக்கு கொண்டு வர முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று முன்தினம் திருமண நிகழ்வில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 63 பேர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்