தூய்மையான அரசாங்கத்தை ஸ்தாபிக்க ஒன்றிணைவோம் – அநுர அழைப்பு.

இலஞ்சம், ஊழல், அச்சமற்ற தூய்மையான அரசாங்கத்தை ஸ்தாபிக்க அனைவரும் பேதங்கள் கடந்து ஒன்றிணைய வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு- காலி முகத்திடலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “நாட்டில் அடுத்து இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக என்னை களமிறக்கியதையிட்டு, நான் முதலில் அனைத்துத் தரப்பினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் கடந்த 30 வருடங்களாக நாட்டின் அரசியலுடன் ஒன்றித்து இருக்கிறேன். இத்தனை காலங்களாக வெற்றிகள், தோல்விகள், சவால்கள் என அனைத்தையும் நாம் சந்தித்துவிட்டோம். இந்தக் காலத்தில் நாம் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரையான மக்களின் உண்மையான தேவைகளை அறிந்துகொண்டுள்ளோம்.

இவர்களின் தேவைகளை 71 வருடங்களாக ஆட்சி செய்த எந்தவொரு அரசாங்கமும் நிறைவேற்றவில்லை என்பதுவே உண்மையாகும். இந்தப் பாதையிலிருந்து புதிய பாதையில் பயணிக்கத் தான் நாம் தற்போது மக்களை அழைக்கிறோம். இந்த ஓட்டத்தில் அனைத்து இன மக்களும் சங்கமிக்க வேண்டும்.

மக்களுக்கு இந்த ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு விதமான பாதைகள் திறக்கப்பட்டுள்ளன. ஒன்று, கடந்த காலங்களைப் போன்ற அழிவுப்பாதை. மற்றையது சுதந்திரமும், சமத்துவமும் நிறைந்த புதிய பாதை.

இதில் எந்தப் பாதையில் பயணிப்பது நாட்டினதும், மக்களதும் எதிர்க்காலத்திற்கு உகந்தது என்பதை வாக்காளர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். மக்களுக்கான அந்த புதிய பாதையை இன்று நாம் காண்பித்து விட்டோம்.

71 வருடங்களாக இந்த நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள், உண்மையில் எதனை சாதித்தார்கள்? இனம், மதம், மொழி என அனைவரையும் பிரித்து, தங்களை அதிகாரத்தில் தக்க வைத்துக் கொள்வதற்கான செயன்முறைகள் மட்டும்தான் இடம்பெற்றன. இதனால், ஏற்பட்ட நன்மைகளை மக்கள் தான் சிந்திக்க வேண்டும்.

கொலைக்காரர்களும், கொள்கைக் காரர்களும் ஆட்சிக்கு வந்தமையால், இந்த நாடே இன்று இலஞ்சம் ஊழலால் நிரம்பிப் போயுள்ளது. இவற்றையெல்லாம் அடியோடு இல்லாதொழிக்க வேண்டும்.

எனவே, இவற்றை வேரறுக்கும் எமது இந்தப் புதிய பாதையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று நாம் இவ்வேளையில் அழைப்பு விடுக்கிறோம்” என்று தெரிவித்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்