‘பொடி ஸ்பேரேயர்’ பாவிப்பதால் மார்பக புற்றுநோய் ஏற்படுமா?

‘பொடி ஸ்பேரேயர்’ பாவிப்பதால் மார்பக புற்றுநோய் ஏற்படும் என்கின்றார்கள். உண்மையா டாக்டர்?
ஏ.ஷர்மினி கண்டி

பதில்:- ‘பொடி ஸ்பேரேயர்’ இப்பொழுது தவிர்க்க முடியாத ஒரு பொருளாக பெரும்பாலனவர்களுக்கு மாறிவிட்டது. நெருக்கமான சந்திப்புகள் அலுவலகம், பொது இடங்கள் போன்றவற்றில் மற்றவர்கள் முன் விரும்பப்படுபவராக இருக்க வேண்டும் என்றால் உடை, அலங்காரம் அவற்றிற்கு அடுத்ததாக உடல் சுகந்தமாக இருக்க வேண்டும் என்ற நிலை அவசியமாக இருக்கிறது.

‘பொடி ஸ்பேரேயர்’ பொதுவாக உடலிலும் அக்குள் பகுதியில் அடிக்கப்படுகிறது. அதில் வியர்வை நீர் சுரப்பதற்கு எதிரான இரசாயனங்களும் சுகந்த மணங்களைக் கொடுக்கும் இரசாயனங்களும் அடங்குகின்றன. அக்குளானது மார்பகத்திற்கு அருகில் உள்ளது. எனவே இவை பாவிக்கப்படுவதற்கும் மார்பக புற்றுநோய்க்கும் தொடர்பு இருப்பதாக பல விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள்.

‘பொடி ஸ்பேரேயர்’ பல வகையான இரசாயனங்கள் கலந்துள்ளன. இவை எல்லாவற்றையும் பற்றி ஆய்வுகள் செய்யபடுவதற்கான சாத்தியங்கள் இல்லை. ஆனால் அதில் கலந்துள்ள இரு முக்கிய இரசாயனங்களான அலுமினியம் மற்றும் பராபென் ஆகியவற்றிற்கே (parabens) புற்று நோய் வருவதற்கான சாத்தியம் இருப்பதாக அந்த விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

மார்புக புற்றுநோய் பெரும்பாலும் பெண்களின் இடது மார்பிலேயே வருகிறது. மார்பகத்தை நான்கு பிரிவுகளாகப் பார்த்தால் அவர்களின் மார்பின் வெளிப்புற மேற்பகுதியிலேயே அதிகமாக வருவதாக சொல்லப்படுகிறது. பொதுவாக வலது கையால் அடிக்கும் போது இடது அக்குளிலியே ‘பொடி ஸ்பேரேயர்’ அதிகமாக அடிக்கப்படும். அதற்கு அருகில்தான் புற்று அதிகம் ஏற்படும் மார்பகத்தின் வெளிப்புற மேற்பகுதி இருக்கிறது. அவற்றைக் காரணம் காட்டியே மார்பக புற்று நோய்க்கும் ‘பொடி ஸ்பேரேயர்’ க்கும் தொடர்பு இருப்பதாக முடிச்சுப் போடுகிறார்கள்.

இந்த அலுமினியமானது பெண் ஹோர்மோனான ஈஸ்ரோசினினை ஒத்த விளைவுகளை உண்டாக்கும் என அவர்கள் நம்புகிறார்கள். ஈஸ்ரோசினானது மார்பக புற்றுநோயக் கலங்கள் வளர்வதை ஊக்குவிக்கும் என்பது தெரிந்ததே. அலுமினியமானது நேரடியாகவும் மார்பக கலங்களில் தாக்கம் செலுத்தும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.

இருந்தபோதும் இது வரை செய்யப்பட்ட எந்த நம்பகமான ஆய்வுகளும் அலுமினியமானது மார்பகப் புற்றுநோயைத் தூண்டும் என்பதை உறுதிப்படுத்தவில்லை என்பதைக் கூறலாம்.

வேறு ஆய்வாளர்கள், பல பொடி ஸ்பேரேயர்களில் கலந்துள்ள பராபென் பற்றி எச்சரிக்கை செய்துள்ளனர். இந்த பராபினானது பெண் ஹோர்மோனான ஈஸ்ரோஜினை ஒத்த விதமாக மார்பக கலங்களில் செயற்பட்டு புற்றுநோயைத் தூண்டும் என்கிறார்கள். அத்தோடு பராபின் ஆனது சில மார்பக கட்டிகளுக்குள் இருந்தமையும் அவதானிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவைதான் மார்பக புற்றுநோயைத் தூண்டுகின்றன என்பது எங்குமே நிரூபிக்கப்படவி;ல்லை. இருந்தபோதும் பெரும்பாலான பொடி ஸ்பேரேயர்களில் இப்பொழுது பராபென் சேர்க்கப்படுவதில்லை.

உண்மையில் மார்பக புற்றுநோய்க்கும் பொடி ஸ்பேரேயர்களுக்கு இடையே தொடர்பு இருக்கிறதா என சில ஆய்வுகளே செய்யப்படுள்ளன. அவை எதுவுமே அவ்வாறான தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய அளவிலான புதிய ஆய்வுகள் செய்தால்தான் தெளிவான முடிவுகள் தெரியும்.

தெளிவான முடிவுகள் இல்லாத காரணத்தால் தங்கள் சுயபாதுகாப்பு கருதி தங்கள் குடும்ப சுற்றுவட்டத்திற்குள் மார்பக புற்றுநோய் உள்ள பெண்கள் அவற்றை உபயோகிப்தை தவிர்க்கலாம், அல்லது குறைக்கலாம் என்று சொல்லலாம்.

மார்பக புற்றுநோயாளரின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்து வருகிறது. அந்த அதிகரிப்பிற்கு வேறு பல காரணங்கள் இருப்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். இப்பொழுது மனிதர்களில் வயது எல்லை நீடித்து வருகிறது. வயது கூடக் கூட ஏனைய புற்றுநோய்கள் போலவே மார்பக புற்றுநோய் வருவதும் அதிகரிக்கவே செய்யும்.

குறைந்த வயதிலேயே பெரியபிள்ளை ஆவது, பிந்திய திருமணங்களும் குழந்தைகளைப் பெற ஆரம்பிக்கும் காலம் தாமதிப்பது, தாய்ப்பாலுட்டும் காலம் குறைவது, அதீத எடை போன்ற பலவற்றாலும் மார்பகங்கள் ஹோர்மோன் தாக்கத்துக்கு ஆளாகும் சாத்தியத்தை அதிகரிக்கின்றன. இத்தகைய காரணங்கள் யாவும் ஒன்று சேர்ந்தே இப்பொழுது பெண்கள் மார்பக புற்றுநோய்க்கு ஆளாவது அதிகமாகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

டொக்டர். எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்


Recommended For You

About the Author: Editor