உங்கள் தோற்றம் உங்களுக்குத் திருப்தி அளிக்கிறதா?

பதின்ம வயதினரே
உங்கள் தோற்றம் உங்களுக்குத் திருப்தி அளிக்கிறதா?

‘இது மற்றப் பக்கத்தைவிடப் பெரிசாக இருக்கிறது’ என்றாள் அவள்

கலந்தாலோசனை முடிந்து வெளியேற எழுந்தபோதுதான் அப்படிச் சொன்னாள். காய்ச்சல், சளி இருமலுக்காக மருந்தெடுக்க வந்திருந்தாள் அந்தப் பள்ளி மாணவி.

தனது வலது கையைச் சுட்டிக் காட்டுவது கண்ணில் பட்டபோது, அடுத்த நோயாளி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

‘அப்படி இருப்பது இயற்கைதானே. அதிகம் உபயோகிக்கும் கை மற்றதைவிட சற்று மொத்தமாக இருக்கும்’ என ஆறுதல் சொல்லி அனுப்பி வைததுவிட்டு அடுத்தவர் பிரச்சனையில் மூழ்கினேன்.

‘மூக்கு சற்று வளைவாக இருப்பதாக’ அதே பெண் அடுத்த முறை வந்து சொன்ன போது சற்று உசாரானேன். அவளது முகத்தில் சற்று வாட்டம் இருப்பதையும் அவதானிக்க முடிந்தது.

சற்று ஆறுதலாகப் பேசிய போது அவளுக்கு தனது தோற்றம் (உடற் பிம்பம் (Body image) ) பற்றிய தற்குறை இருப்பதை உணர்ந்தேன்.

பதின்ம வயதுகளில் உடல் துரிதமாக வளர்கிறது. ஹோர்மோன்கள் சுரக்கின்றன. இதனால் உடல் உறுப்புகளிலும் தோற்றங்களிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாற்றங்கள் அனைத்துமே மனதுக்கு பிடித்தவையாக இருக்கும் என எண்ண முடியாது. சில மகிழ வைக்கும். வேறு சில திருப்தி அளிக்காது. சில ஏமாற்றத்தையும் தரலாம்.

பதின்ம வயதுகளில் பாலுணர்வும் அதன் நீட்சியாக எதிர் பாலினரிடம் கவர்ச்சியும் ஈர்ப்பும் ஏற்படுவது இயல்பு.

இதனால் பதின்ம வயதினரிடையே தமது உடற்தோற்றம், அழகு போன்றவை பற்றிய அக்கறையானது பெரும்பாலான முதன்மைப்படுவது சகசம். எல்லோருக்குமே எல்லாமே பூரண எழிலுடனும் நிறைவாகவும் இருக்க மாட்டாது. சில குறைகள் இருக்கும் சில நிறைவுகளும் இருக்கவே செய்யும்.

உடற் பிம்பம் (Body image)  என்பது ஒருவர் தனது உடலைப் பற்றி என்ன எண்ணுகிறார் என்பதாகும். தான் கவர்ச்சியாக இருக்கிறாரா மற்றவர்கள் தனது தோற்றத்தை விரும்புகிறார்களா என என எண்ணுவதாக விளங்கச் சொல்லலாம்.

பதின்ம வயதுகளில் தங்களது உடற்பிம்பம் அல்லது சுயதோற்றம் பற்றிய எண்ணக் கருக்கள் தோன்றுவது அதிகம். சிலர் தங்களது நிறைகளை முன்னிறுத்தி மற்றவர்களிடம் பாராட்டுப் பெற்றுவிடுவர்.  மாறாக வேறு சிலர் குறைகளையே எண்ணி கவலையில் மூழ்குவதுண்டு.

ஒரு பக்க மார்பு பெரிசாக எனப் பெண்களும்
அல்லது ஒரு பக்க விதைப்பை பெரிசாக எனப் பையன்களும் கவலைப்பட்டுக் கொண்டு மருத்துவர்களிடம் வருவது அதிகம்.
தான் உயரமாக அல்லது குள்ளமாக இருப்பதான உணர்வு,
தனது நிறம் குறைவாக இருப்பதாக எண்ணல் இப்படிப் பல.
தமது சருமம் மிருதுவாக இல்லை,
தனது குரல் கரகரக்கிறது.
தனது பல் சற்று பழுப்பு நிறமாக இருக்கிறது.
தலைமுடி கொட்டுகிறது.
நகம் அசிங்கமாக இருக்கிறது.

இவ்வாறெல்லாம் தமது உடல் பற்றிய மறையான சிந்தனைகள் பலவும் பதின்மங்களில் ஏற்படுகின்றன.

இப்படியான எண்ணங்கள் உங்களுக்கும் ஏற்பட்டால் அது பற்றி கவலைப்படவோ வெட்கப்படவோ வேண்டாம். நீங்கள் மட்டுமல்ல நிறையப்பேருக்கு இத்தகைய சிந்தனைகள் வருவதுண்டு.

இதனால் மனப் பதற்றம் (Anxiety)  மனவிரக்தி (Depression)  ஆகியன ஏற்படக் கூடும்

தனது உடல் பற்றிய எண்ணங்களுக்கும் (Body Image)   சுயமதிப்பீடுகளுக்கும் (self-esteem) நிறையத் தொடர்பிருக்கிறது.

சுயமதிப்பீடு என்பது ஒருவகை மதிப்பீடுதான். நீங்கள் எந்தளவு பெறுமதியாதியானவர் அல்லது முக்கியமானவர் என நீங்களே மதிப்பீடு செய்வதாகும். அத்துடன் மற்றவர்கள் உங்களை எந்தளவு கணக்கில் எடுக்கிறார்கள் என்பதாக நீங்கள் எண்ணுகிறீர்கள் என்பதும் உள்ளடங்கும்.

சுயமதிப்பீடு (self-esteem)  என்பது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் எந்தளவு உங்களைப் பற்றி உயர்வாக எண்ணுகிறீர்களோ அந்தளவுக்கு உங்கள் உள நலமும் உயர்ந்த நிலையில் இருக்கும். அத்துடன் மற்றவர்களோடு நட்பு ஏற்படுத்துவதும் பேணுவதும் சுலபமாக இருக்கும். உறவாடுவதும் மனதிற்கு இனியதாக இருக்கும். ஏனெனில் தங்களைப் பற்றிய உயர்ந்த சுயபிம்பம் கொண்டவர்கள் தங்கள் திறமைகளையும் இயலாமைகளையும் புரிந்திருப்பர்

தனது உடல் அழகாக இல்லை, அசிங்கமாக இருக்கிறது என எண்ணுபவருக்கு தன்னைப் பற்றிய தாழ்வுணர்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் எனலாம். தாழ்வு மனப்பான்மை என்பதும் இதனோடு தொடர்புடையதே.

முதலில் குறிப்பிட்ட பெண்ணுக்கு தனது உடற்தோற்றம் பற்றிய திருப்தியின்மையானது கவலையுடன் கூடிய மனச்சோர்வாக (anxiety with deprssion) மாறியிருந்தது. அதனால்தான் அவளது முகத்தில் வாட்டம் ஒட்டிக் கொண்டிருந்தது.

அதேபோல ஒவ்வொருவரும் தமது தோற்றம் பற்றிய தாழ்வுமனப்பான்மை (Inferiority complex) உளம் சார்ந்த நோய்களாக மாறாது தடுப்பது அவசியம்.

அதற்கான துடுப்பு அவரவர் கைகளிலேயே இருக்கிறது.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

அப்படியான மறை எண்ணங்கள் வந்தால் நீங்கள் செய்யக் கூடியது என்ன?

எல்லோரிடமும் ஏதாவது சில சிறப்பு அம்சங்கள் கவர்ச்சிகள் அல்லது திறமைகள் இருக்கவே செய்யும். உங்களிடம் நிச்சமாக பல சிறப்பம்சங்கள் இருக்கவே செய்யும். அவற்றை கண்டறியுங்கள்.  உங்களிடம் இருக்கும்,
நீங்கள் அக்கறை எடுக்காத தனிச்சிறப்புகளைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பியுங்கள்.

நிறம் கறுப்பாக இருந்தாலும் உங்கள் கண்கள் கவர்ச்சியுடையனவாக இருக்கலாம்.

உங்கள் சிரிப்பில் உள்ள ஏதோ ஒரு மோகனம் மற்றவர்களை ஈர்க்கலாம்.

அல்லது உங்கள் உரையாடல் திறன் மற்றவர்கள் உங்களோடு மனம் திறந்து பேச வைக்கலாம்.

விளையாட்டு, சமையல், கையெழுத்து ………

இப்படி ஏதாவது ஒரு சிறப்பு அல்லது பல சிறப்புகள் உங்களிடத்தில் மறைந்து கிடக்கலாம். அவற்றைக் கண்டு பிடியுங்கள். கண்டு பிடித்ததை மெருகூட்டுங்கள். மனம் மகிழ்ச்சியில் ஆளும்.

உங்கள் சிறப்புகளையும் கவர்ச்சிகளையும் தனித்துவமான திறமைகளையும் மீள நினைத்தல் நன்று

உங்கள் சிறப்புகளை நினைத்துப் பார்ப்பதுடன் நின்றுவிடாது அவை பற்றி குறிப்புகள் எழுதி வைப்பது இன்னும் மேலானது.

எழுதத் தவறிவிட்டாலும், தினமும் உங்களை மகிழ்வுறச் செய்த சம்பவங்களை படுக்கைக்கு சென்று தூங்கு முன்னர் இரை மீட்டிப் பார்ப்பதுவும் சுயபிம்பத்தை உயர்த்தக் கூடியதாகும்.

தினமும் குறைந்தது மூன்று மகிழ்வூட்டிய நிகழ்வுகளையாவது நினைவுபடுத்துங்கள்.

உதாரணத்திற்கு நீங்கள் கூறிய விடைக்கு ஆசிரியர் திருப்தி எனச் சொல்லியிருக்கலாம்.

அல்லது உங்களுக்கு தெரிந்திருந்தும், நீங்கள் விடையளிக்க முன் வேறொருவர் அதே விடையைச் சொல்லிப் பாராட்டைப் பெற்றிருக்கக் கூடும்.
விடை உங்களுக்குத் தெரிந்திருந்ததை உங்களுக்குக் கிடைத்த வெகுமதியாக எண்ணி மகிழுங்கள்.

‘அட நான் சொல்லாமல் விட்டுவிட்டேனே’ எனக் கவலைப்படுவது கூடவே கூடாது.

உங்களது உடை, அல்லது நீங்கள் தயாரித்த உணவு, அல்லது நீங்கள் சொன்ன ஜோக் மற்றவர்களைக் கவர்ந்திருக்கும்.

உங்கள் வெற்றிகளை நினைவுபடுத்துங்கள். 

அவற்றை உங்களுக்குக் கேட்குமாறு வாய்விட்டு உரத்துச் சொல்லுங்கள்.

அல்லது உங்கள் பெற்றோர், அண்ணன், அக்கா அல்லது உங்களைப் புரிந்து கொண்ட ஒருவருடன் பகிர்ந்து மகிழுங்கள்.

இவை யாவுமே உங்களைப் பற்றிய உங்கள் சுயபிம்பத்தை உயர்த்த உதவும்.

உங்களுக்குள் ஏதோ ஒரு அழகு ஒளிந்திருக்கிறது. உங்களின் மனது மற்றவர்களைக் கவருகிறது. உங்களுக்கு மட்டுமே தனித்துவமான ஏதோ ஒரு ஆற்றல் அழகு குணம் குடிகொண்டிருக்கிறது.

அதை நினையுங்கள். அதையிட்டுப் பெருமைப்படுங்கள். அதை மேலும் வளர்தெடுக்க முயலுங்கள்.

ஒளிமயமான எதிர்காலம் உங்கள் வரவிற்காகக் காத்திருக்கிறது.
பயன்படுத்தாது தப்ப விட்டுவிடாதீர்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

M.B.B.S (Cey); D.F.M (Col), F.C.G.P (Col)

குடும்ப மருத்துவர்


Recommended For You

About the Author: Editor