விசா தடை விதிக்கப்படலாம் – அமெரிக்கா எச்சரிக்கை!

பிரித்தானியாவின் ஜிப்ரால்டரால் விடுவிக்கப்பட்டுள்ள ஈரானின் கிரேஸ் 1 எண்ணெய்க் கப்பல் பணியாளர்கள் அமெரிக்கா வருவதற்குத் தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஆர்ட்டகஸினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘ஈரானிலிருந்து எண்ணெயை எடுத்துச் சென்று பிற நாடுகளுக்கு வழங்குவதில், அந்த நாட்டின் இஸ்லாமிய புரட்சிப் படையினருக்கு கிரேஸ் 1 உள்ளிட்ட எண்ணெய்க் கப்பல்களின் பணியாளர்கள் உதவி செய்கின்றனர்.

அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட இஸ்லாமிய புரட்சிப் படையினருக்கு உதவி செய்யும் அந்தப் பணியாளர்கள், அமெரிக்காவின் பயங்கரவாதம் தொடர்பான சட்டங்களின் கீழ் நாட்டுக்குள் வருவதற்கு தகுதி அற்றவர்கள் ஆவர்.

இதுபோன்ற கப்பல்களில் பணியாற்றும் சர்வதேச சமுதாயத்தினர், அமெரிக்காவினால் விசா தடை விதிக்கப்படுவதற்கான அபாயத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

கிரேஸ் 1 எண்ணெய்க் கப்பலின் பணியாளர்களைப் பொருத்தவரை, ஈரான் இஸ்லாமிய புரட்சிப் படைக்கு பொருள் உதவி அளித்தவர்கள் என்ற முறையில் எங்களது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என குறிப்பிட்டுள்ளார்.

தடை செய்யப்பட்ட சிரிய நிறுவனத்துக்கு மசகு எண்ணெய் ஏற்றிச் சென்றதாக, ஈரானின் கிரேஸ் 1 எண்ணெய்க் கப்பலை ஜிப்ரால்டர் நீரிணைப்பகுதியில் பிரித்தானியா கடந்த மாதம் 4-ஆம் திகதி சிறைபிடித்தது.

இந்த நிலையில், தங்களது மீன்பிடிக் கப்பலில் மோதியதாகக் கூறி, ஹோர்முஸ் நீரிணைப்பகுதியில் பிரித்தானிய எண்ணெய்க் கப்பலான ஸ்டெனா இம்பெரோவை ஈரான் கடந்த மாதம் 19-ஆம் திகதி சிறைபிடித்தது.

இதன்காரணமாக பிரித்தானியாவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது. அந்தப் பதற்றத்தைத் தணிப்பதற்காக இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், கிரேஸ் 1 கப்பலை விடுவிப்பது குறித்து, ஜிப்ரால்டர் உச்சநீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை தீர்ப்பு வழங்குவதாக இருந்தது.

எனினும், அந்த எண்ணெய்க் கப்பலை விடுவிக்க வேண்டாம் என்று ஜிப்ரால்டர் அரசாங்கத்திடம் அமெரிக்க நீதித் துறை கடைசி நேரத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்தது.

எனினும் குறித்த மனுவை நிராகரித்த ஜிப்ரால்டர் உச்சநீதிமன்றம், ஈரான் கப்பலை விடுவிக்க உத்தரவிட்டது.


Recommended For You

About the Author: Editor