அடுத்த கட்டத்தில் ஆதியின் ‘கிளாப்’!

ஆதி நடிக்கும் கிளாப் படத்தின் படப்பிடிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகிவருகின்றன.

அறிமுக இயக்குநர் பிரித்வி ஆதித்யா இயக்கும் கிளாப் படத்தில் ஆதி கதாநாயகனாக நடிக்கிறார். 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை மையமாக கொண்டு ஸ்போர்ட்ஸ் டிராமா ஜானரில் உருவாகும் இப்படத்தில் பந்தயத்தில் வெற்றி பெற ஹீரோ சந்திக்கும் சவால்களை பின்னணியாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஆதிக்கு ஜோடியாக ஆகாங்ஷா சிங் நடிக்கிறார். இவரும் தடகள வீராங்கனையாக நடிக்கிறார். ஆதியின் தடகள பயணத்திற்கு ஆகாங்ஷாவின் கதாபாத்திரம் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. கோலி சோடா 2 படத்தில் நடித்த கிரிஷா குருப் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பை இளையராஜா, நானி ஆகியோர் ஜூன் மாதம் சென்னையில் தொடங்கிவைத்தனர்.

படத்தின் தயாரிப்பாளர் கார்த்திகேயன் படம் குறித்து கூறும் போது, “முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதற்கான முழு பாராட்டும் இயக்குநர் பிரித்வி ஆதித்யாவையே சாரும். வழக்கமாக அறிமுக இயக்குநர்கள் கதையை திறம்பட விவரித்தாலும் படப்பிடிப்பின் போது தடுமாற்றம் அடைவர்.

ஆனால் பிரித்வி ஆதித்யா திறமையாக கையாண்டார். முதற்கட்ட படப்பிடிப்பு மட்டும் நிறைவடைந்தாலும் 50 சதவீத காட்சிகளை படமாக்கிவிட்டோம்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் செப்டம்பர் மாதம் முதல் வாரம் தொடங்கவுள்ளது. தடகள காட்சிகள், பாடல் காட்சிகள் அங்கு படமாக்கப்படவுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor