துருவ் பாடும் ‘எதற்கடி வலி தந்தாய்’!

துருவ் விக்ரம் நடிக்கும் ஆதித்யா வர்மா படத்தில் இருந்து புதிய பாடலின் லிரிக்கல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக உருவாகிவரும் படம் ஆதித்யா வர்மா. பாலா இயக்கத்தில் உருவான வர்மா படம் கைவிடப்பட்டு அதன் பின் மீண்டும் உருவாகியுள்ள ‘ஆதித்ய வர்மா’ திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

இந்த நிலையில், படத்தின் கதாநாயகனான துருவ் விக்ரம் இந்த படத்திற்காக பாடிய ‘எதற்கடி வலி தந்தாய்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

முன்னதாக இப்படம் குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட துருவ் விக்ரம் “ஆதித்யா வர்மா அழகான விஷயமாக உள்ளது. இது போல் என் வாழ்வில் எப்போதும் நிகழ்ந்ததில்லை. அவன்தான் எனக்கு வாழ்க்கை பற்றிய அர்த்தத்தை, காரணத்தை, என்னைப் பற்றிய தெளிவை, மிக முக்கியமாக எப்படி விட்டுக்கொடுக்காமல் போராடவேண்டும் என்பதையும் கற்றுத் தந்தான்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ‘எதற்கடி வலி தந்தாய்’ பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ராதன் இசையமைத்துள்ள இப்பாடலுக்கான வரிகளை விவேக் எழுதியுள்ளார்.

எதற்கடி வலி தந்தாய்
உயிரின் தொல்லையே
இதற்குமேல் வலி ஒன்றும்
உலகில் இல்லையே
நீதானடி நினைவின் தேனியே
என் வாழ்க்கையில் விழி நீரின் தீனியே

என அமைந்த பாடல் வரிகளுக்கு துருவ்வின் குரல் உயிரூட்டியுள்ளது. பின்னணிப் பாடகராக தனது முதல் பாடலிலேயே தான் ஒரு தேர்ந்த பாடகர் என்பதை அவர் உணர்த்தியுள்ளார்.

உன்னை தவிர எதுவுமே இஷ்டமில்லையே
விட்டு போன வேதனையே
வட்டம் போட்டு என்னை வெறுக்கும்
காதல் தீயிலே உந்தன்
கண்கள் தேடினேன்
உன்னை பார்க்கணும்

என்பதாக அமைந்த வரிகள் பிரிவின் வலியையும், காதலின் ஆழத்தையும் அழகுற உணர்த்துகிறது.

இப்படத்தில் துருவ்க்கு ஜோடியாக பனித்தா சந்து அறிமுகமாகிறார். மேலும் பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிசயா இயக்கும் இப்படத்தை ஈ4 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்ய விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.


Recommended For You

About the Author: Editor