மகேந்திரசிங் தோனி டெல்லி திரும்பினார்.

ராணுவத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட்வீரர் மகேந்திரசிங் தோனி இன்று டெல்லி திரும்பினார்.

இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றுவருகிறது. உலகக் கோப்பைத் தொடருக்குப் பின் இரு மாதங்கள் தோனிக்கு ஓய்வு வழங்கப்பட்டது.

இந்த ஓய்வு காலங்களில் அவர் ராணுவத்தில் இணைந்து பயிற்சிபெறப்போவதாக அறிவிக்கப்பட்டது. தோனி இந்திய இராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கலோனல் பதவியில் உள்ளார். பாராஷுட் ரெஜிமென்ட் பிரிவில் அவருக்கு அந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. கௌரவ பதவி தான் என்றாலும், தோனி இராணுவம் மீது கொண்ட ஆர்வம் காரணமாக இராணுவ பயிற்சி மற்றும் பணிகளில் ஈடுபடச் சென்றார்.

தோனி ஜூலை 31ஆம் தேதி முதல் 106 டிஏ பட்டாலியனில் ரோந்து பணியில் ஈடுபட்டார். காஷ்மீர் பள்ளதாக்கில் உள்ள “விக்டர் ஃபோர்ஸ்” எனும் படையின் ஒரு அங்கமாக செயல்பட்டார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிதாக பிரிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள இராணுவ வீரர்களுக்கான மருத்துவமனையில் நோயாளிகளுடன் கலந்துரையாடினார்.
“தோனி இந்திய ராணுவத்துக்கான விளம்பர தூதராக உள்ளார்.

அவரது யூனிட்டில் உள்ள உறுப்பினர்களுக்கு மிகுந்த உற்சாகமம் அளித்தார். அவர்களுடன் வாலி பால், ஃபுட் பால் விளையாடினார். பயிற்சிகளையும் மேற்கொண்டார்” என்று இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரு வார காலம் பயிற்சி பெற்ற அவருக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதியுடன் பயிற்சி நிறைவு பெற்றது.

தோனி இந்திய அணியிலிருந்து ஓய்வு பெறுகிறாரா என்ற கேள்வி தொடர்ந்து ஒலித்துவரும் நிலையில் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், “இது குறித்து அவரிடம் விவாதிப்போம்” என்று தெரிவித்தார்.

“ஓய்வு பெறுவது என்பது வீரரின் தனிப்பட்ட முடிவு. தோனி போன்ற சிறந்த வீரருக்கு தான் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது தெரியும். ஆனால் அணியின் எதிர்கால பயணதிட்டம் என்பது தேர்வுக்குழுவின் கையில் உள்ளது” என்று கூறினார்.


Recommended For You

About the Author: Editor