விநாயகர் சதுர்த்தி: சிலை வைக்க புதிய முறை!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை நிறுவுவதற்குச் சென்னை காவல்துறை புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலை நிறுவுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஒரு இடத்தில் சிலை நிறுவுவதற்கு காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, மின்சாரத் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், போன்ற பல்வேறு துறைகளிடமிருந்து அனுமதி பெற வேண்டியது அவசியமாகிறது.

இதில் ஒரு துறையால் அனுமதி மறுக்கப்பட்டாலும் சிலை நிறுவுவதில் சிரமம் ஏற்படும். கடந்த ஆண்டு பலர் சிலை நிறுவுவதற்கு அனுமதி கோரிய நிலையில் 2500 சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் பல துறைகளிடம் அனுமதி கோர வேண்டும் என்பதால் சிலை நிறுவுவதில் சிரமம் இருப்பதாக இந்து அமைப்புகள் பல குற்றம்சாட்டின.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 17) அனைத்து துறைகளிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை என்று சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது

இதனைத்தொடர்ந்து, சென்னை காவல்துறை, ”சென்னையில் 12 காவல் மாவட்டங்களுக்கும் 12 காவல் அதிகாரிகளைப் பொறுப்பு அதிகாரிகளாக மாநகர காவல்துறை நியமிக்கவுள்ளது.

அதன் அடிப்படையில் சிலை நிறுவுவதற்கு அந்த அதிகாரிகளிடம் மட்டும் மனு சமர்ப்பித்தால் போதும், அந்த அதிகாரி சிலை நிறுவுவதற்காக அனைத்து துறைகளிலிருந்தும் அனுமதி பெற்றுத் தருவார். மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்றால் அந்த சிறப்பு அதிகாரியே மறுப்பு தெரிவிப்பார்” என்று தெரிவித்துள்ளது.


Recommended For You

About the Author: Editor