வாணியைச் சுற்றும் இயக்குநர்கள்!

வாணி போஜனுக்கு கதாநாயகியாக நடிக்க தொடர்ந்து வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன.

தெய்வமகள் தொலைக்காட்சித் தொடர் மூலம் பிரபலமானவர் வாணி போஜன். லோகேஷ் இயக்கும் ‘என் 4’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

சுயாதீனப் படமாக உருவாகவுள்ள இப்படம் காசிமேடு பகுதியை மையமாகக் கொண்டு திரில்லர் ஜானரில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டது. இந்தப் படத்திலிருந்து வாணி போஜன் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகினார். அவரது கதாபாத்திரத்தில் ஷரன்யா துராதி கதாநாயகியாக நடிக்கிறார்.

வாணி போஜன் தற்போது வைபவ் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார். அறிமுக இயக்குநர் எஸ்.ஜி. சார்லஸ் இயக்குகிறார். இவர் இயக்குநர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். நிதின் சத்யா இந்தப் படத்தை தயாரிக்க, பூர்ணா, ஈஸ்வரி ராவ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வாணி போஜன் கதாநாயகியாக அறிமுகமாகிறார். விஜயதேவரகொண்டா இந்தப் படத்தை தயாரிக்கிறார். அவருக்கு ஜோடியாக இயக்குநர் தருண் பாஸ்கர் நடிக்கிறார்.

இவர் விஜய்தேவரகொண்டா நடித்த பெல்லு சூப்புலு படத்தை இயக்கியவர். சென்னையைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் சமீர் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இவ்விரு படங்களின் பணிகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வாணி மற்றொரு படத்தில் கதாநாயகியாக இணைந்துள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய படத்தையும் ஒரு அறிமுக இயக்குநரே இயக்குகிறார். நிரோஜன் என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் ஓவியா நடித்த 90எம்.எல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பொம்மு லட்சுமி மற்றொரு கதாநாயகியாக இணைந்துள்ளார்.

இப்படத்தை அருண் பாண்டியனின் ஏ&பி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகவுள்ளன.


Recommended For You

About the Author: Editor