இராணுவத்திற்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி!

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், புதிய இராணுவத் தளபதி தொடர்பான முடிவு இன்று சிறிலங்கா அதிபரால் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா இராணுவத் தளபதி தொடர்பான அறிவிப்பை நேற்று அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது, எனினும், நேற்று எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.  தற்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க சேவை நீடிப்பைக் கோரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் புதிய இராணுவத் தளபதிக்கான போட்டியில் நான்கு மூத்த மேஜர் ஜெனரல்கள் உள்ளனர்.  மேஜர் ஜெனரல்கள் சவேந்திர சில்வா, சத்யப்பிரிய லியனகே, தர்ஷன ஹெற்றியாராச்சி, குமுது பெரேரா ஆகிய நால்வரில், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இவர் தற்போது இராணுவத்தின் இரண்டாவது நிலைப் பதவியான இராணுவத் தலைமை அதிகாரியாக இருக்கிறார்.  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று இராணுவத் தளபதி தொடர்பான முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்ப்பதாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

தற்போதைய இராணுவத் தளபதிக்கு சேவை நீடிப்பு அளிக்கப்படுமா அல்லது புதிய தளபதி நியமிக்கப்படுவாரா என்பது குறித்து ஏதும் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, இன்று புதிய இராணுவத் தளபதி நியமனம் தொடர்பான அறிவிப்பை சிறிலங்கா அதிபர் வெளியிடுவார் என, பாதுகாப்புச் செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொடவும், தெரிவித்துள்ளார்.  எனினும், புதிய இராணுவத் தளபதி நியமனம் தொடர்பான எந்த தகவலும் தனக்குத் தெரியாது என, சிறிலங்கா அதிபரின் செயலர் உதய செனிவிரத்ன கூறியுள்ளார்.

இதற்கிடையே, புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தும் சமூக வலைத்தளப் பரப்புரை ஒன்று தீவிரமாக இடம்பெற்று வருகிறது.

முன்னொரு போதும் இல்லாத வகையில் மிகத் தீவிரமான முறையில் இந்தப் பரப்புரை இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டே, இராணுவத் தளபதி தொடர்பான முடிவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுப்பார் என, பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, தற்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்கு மூன்றாவது சேவை நீடிப்பு அளிக்கப்படலாம் என்றும், தகவல்கள் கூறுகின்றன


Recommended For You

About the Author: Editor