அவுஸ்ரேலியா செல்ல முற்பட்டவர்கள் சிலாபத்தில் கைது.

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 13 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிலாபத்திலிருந்து, அவுஸ்ரேலியாவுக்கு தப்பிச் செல்ல முற்பட்டவர்களே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாபம், அம்பகந்தவில பகுதியிலிருந்து படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்கு சிலர் தப்பிச்செல்ல முற்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை கடற்படையின் புலனாய்வுப் பிரிவுக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து கடற்படையினர் இந்த விடயம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், நேற்று நள்ளிரவில் குறித்த தரப்பினர் சிறிய ரக லொறி ஒன்றின் ஊடாக கடற்கரையை நோக்கி பயணிக்கையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரைவலைத் தொழிலுக்காக இரணவில பிரதேசத்திற்கு சென்று அங்கு தொழில் இல்லாத காரணத்தால் மீண்டும் திரும்பிச் செல்வதாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள், பொலிஸாரிடம் இதன்போது தெரிவித்துள்ளனர்.

எனினும், அவர்கள் அம்பகந்தவில பிரதேசத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் சென்று தங்கியிருந்தமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் பத்து பேர், மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இருவர் தொடுவாய் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ள பொலிஸார், குறித்த 13 பேரும் 19 வயதுக்கும் 61 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் குறிப்பிட்டனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணையின் பின்னர் சந்தேகநபர்களை சிலாபம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


Recommended For You

About the Author: ஈழவன்