ஆப்கானிஸ்தானில் திருமண வைபவத்தில் குண்டு வெடிப்பு – 40 பேர் பலி.

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற திருமண விருந்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியாக அமெரிக்க அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்திவரும் சூழலில், ஐ.எஸ். அமைப்பினரும் அங்கு தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் திருமண நிகழ்வொன்று நேற்றிரவு(சனிக்கிழமை) நடைபெற்றது.

இதில் சுமார் 1,000 இற்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர். விருந்தின்போது இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. கலைஞர்கள் இசைத்துக் கொண்டிருந்தபோது, மேடையருகே வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் விருந்தில் பங்கேற்ற இளைஞர்கள், குழந்தைகள் 40 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் பலரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகின்றது.


Recommended For You

About the Author: ஈழவன்