ஒரேயொரு வாக்குப்பெற்ற வேட்பாளர் – அவரின் குடும்பத்திலையே ஐந்து வாக்காளர்கள் உள்ளனராம்!

கோயம்புத்தூர் மாவட்டம் குருடம்பாளையத்தில் நடந்த இடைத் தேர்தலில் பா.ஜ.கவைச் சேர்ந்த வேட்பாளர் ஒரே ஒரு வாக்கை மட்டும் பெற்றுள்ளார். அவருக்கு அவருடைய குடும்பத்தினரே வாக்களிக்காதது ஏன் சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் குருடம்பாளைய ஊராட்சி 9வது வார்டுக்கான இடைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. ஊராட்சி வார்டுக்கான தேர்தல் என்பதால் வேட்பாளர்கள் கட்சி சின்னத்தில் அல்லாமல் சுயேச்சை சின்னத்தின் அடிப்படையிலேயே தேர்தல் நடத்தப்பட்டது.

அதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. அதன்படி, கட்டில் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்ட தி.மு.கவைச் சேர்ந்த ஆ. அருள்ராஜ் 387 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். ஜெயராஜ் என்பவர் 240 வாக்குகளும் வைத்தியலிங்கம் 196 வாக்குகளும் கந்தேஷ் 84 வாக்குகளும் ரவிக்குமார் என்பவர் 2 வாக்குகளையும் பெற்றனர். மேலும், தீ. கார்த்திக் என்பவர் கார் சின்னத்தில் போட்டியிட்டு ஒரே ஒரு வாக்கை மட்டும் பெற்றுள்ளார்.

கார்த்திக்கின் குடும்பத்தில் ஐந்து பேர் இருந்தும் ஒருவர்கூட அவருக்கு வாக்களிக்காதது ஏன் என்று பலரும் சமூக வலைத்தளங்களில்  கேள்வியெழுப்பியுள்ளனர்.

இது குறித்து கார்த்திக் தரப்பு கூறுகையில், கார்த்திக் குடியிருப்பது 4வது வார்டில் ஆனால் அவர் போட்டியிட்டது 9வது வார்டில் அதனால், அவரோ, அவரது குடும்பத்தினரோ 9வது வார்டில் வாக்களிக்க முடியவில்லை. இதன் காரணமாகவே அவருக்கு ஒரே ஒரு ஓட்டு கிடைத்துள்ளது என தெரிவிக்கின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்