சிறு குழந்தையாய் அடம்பிடிக்கிறது என் மனது.

என் பேரன்பை பெருங்கருணையென என் மீது பொழிந்தவர்கள் அதிகமுண்டு..
மண் தொட்ட மாரி மழையென மனதில் ஒட்டாது வழுக்கியோடிக்கடந்தது அவையெல்லாம்…

கோடையின் பெருந்தாகத்தில் வெப்பக்காற்றின் ஈரத்தை நீர்வரண்ட நாவில் சேமித்துத்தோற்று நான் கண் செருகிய பொழுதில் காற்றோடு அடித்துவந்த சிறு தூறலாய் என்னை உயிர்ப்பித்துப்போனவள் நீ…

நெஞ்சூடுறுவிய நீர்த்துளியால்
இதயத்தின் ஆழத்தில் உன் பெயரை எழுதிவிட்டுத்தான் சென்றாய் அக்கணப்பொழுதில்…

தூசிமேவிய பாலைவனத்தை மாசிப்பனிப்போல் குளிர்வித்த உன் நேசத்தின் முன்னால் மூர்ச்சையாகித்தான் போனேன் பல பொழுது.

ஒளிகொட்டும் நிலவை தவிர்த்து
மின்னி மறையும் மின்மினியில்
காதல் கொள்ளும் சிறு குழந்தையாய்
உன் நினைவில்தான் அடம்பிடிக்கிறது மனது.

திருவிழாவில் தொலைத்த விளையாட்டு பொம்மையை தேடியலையும் அப்பாவிச்சிறுவனாய் இன்னும் தேடிக்கொண்டேதானிருப்பேன் உன் நிகழ்கால நேசத்தை…

சு. பிரபா


Recommended For You

About the Author: Ananya