ஊரில் நானுமில்லை உயிரோடு நீயுமில்லை…

ஊர் திரண்ட திருவிழா கூட்டத்தில்
நேரெதிர் கடந்த கணப்பொழுதில்
கண்நேர் பார்த்து கைவிரல் கோர்த்து
பின் தலைசாய்த்து – என்
உதடுகள்பற்றி உள் இழுத்து – நீ ஒட்டிவிட்டுப்போன நிறப்பூச்சில் நிறைந்திருந்ததுதானோ அமிர்தமென்பது?

கைகள் உதறி கன்னம் சிவக்க கடந்துபோனவளே
உன் நெஞ்சத்தில் இருந்ததா
எம் ஊர்த் திருவிழா நினைவு?

பாய்போட்டு அமர்ந்திருந்து
பறவைக்காவடி பார்க்கும் சாக்கில்
உன் கைவிரல் பற்றி ஆடிய கபடியில்
என் விரல் முறித்து மோசமடா நீயென்று முறைத்து பின் நேசமுடன்
கன்னத்தில் கன்னம் சாய்த்து – என்னை
வெற்றிகொண்டாய் நீதான்…

ஈசன் பார்த்துவிட்டான் போச்சடி போட்டுக்கொடுக்கப்போகிறான் வீட்டிலென்று பனிக்கென தலைமூடிய
உன் துப்பட்டாவுக்குள் தலை புகுத்த
வாச்சுது சந்தர்ப்பமென்று வாகாய் – என்
காது கடித்தாயே பாவி
வலிக்குதடியென்று கத்த வலிக்கத்தான் கடிக்கிறதென்று இன்னும் கடித்தாயே
காதை மீட்க நான் நடத்திய போராட்டத்திலும் தோல்விதான் எனக்கு…

கண்களை கைகளால் மறைத்து
என் நெற்றியிலே திருநீறு இட்டு
உன் இதழ் குவித்து காற்றூதி
நாடி நிமிர்த்தி கண்ணடித்த
உன் முன் குழந்தையெனத்தான்
அப்போது நானிருந்தேன்

விடிகாலை பொழுதில் விழிகலங்க
நீ விடைபெற்று போகையில்
தலை தாழ்த்தி நான் நிலம் நோக்கி
சிந்திய நீர்த்துளியில் ஒட்டிக்கொண்டிருந்ததுதான் காதலென்று
இப்போது சொல்ல ஊரில் நானுமில்லை
உயிரோடு நீயுமில்லை…😢

சு. பிரபா


Recommended For You

About the Author: Ananya