பிள்ளைகளை தந்துவிட்டு கோட்டாபய தேர்தலில் நிற்கட்டும்

எமது பிள்ளைகளைத் தந்துவிட்டு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதில் தமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தமது இந்த அவல நிலைக்குக் காரணம் கோட்டாபய ராஜபக்ஷதான் எனக் குறிப்பிட்டுள்ள உறவுகள், தமக்கான நீதியினைத் தரும் பட்சத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் தமிழ் மக்களாக இருப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தங்கள் கேள்விகளுக்கு முதலில் கோட்டாபய பதில் கூற வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள்.

இதுகுறித்து வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

“இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடையும் நிலையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் ஆரம்பித்துள்ளன.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த அந்த ஆட்சியின் சகோதரரான கோட்டாபய இன்று ஜனாதிபதி தேர்தல் களத்தில் இறக்கப்பட்டுள்ளார்.

எமக்கு எமது தாயகத்தில் வாழ்வதற்கான உரிமை உள்ளது. வருகின்றவர்கள் எமக்குச் சாதகமாக தமிழ் பிரதிநிதிகளை பயன்படுத்தி தமது இருப்பை தக்கவைத்துக் கொள்பவர்களாக உள்ளனர். நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சி மாறலாம், ஆனால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா என்பது கேள்வியாகவே உள்ளது” என உறவுகள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன், “இறுதி யுத்தத்தின்போது பாதுகாப்புச் செயலாளராக கோட்டாபய இருந்தபடியால் எமது பிள்ளைகளை ஒப்படைத்தமை அவருக்கு தெரியாமல் இருக்காது. இவ்வளவு காலமும் பிள்ளைகளை வெளிக்கொண்டுவரவில்லை.

கடந்த 10 வருடங்களாக நாம் வீதியில் ஏதிலிகளாக கண்ணீர் வடித்துக்கொண்டு எங்களுடைய உறவுகளை தேடிக்கொண்டிருக்கிறோம். எமக்கான நீதி, பொறுப்பு கூறலுடன் வேட்பாளர்கள் வரவேண்டும்” என்று குறிப்பிட்டனர்.

மேலும் ஒரு தாய் குறிப்பிடுகையில், “எனது பிள்ளையைத் தேடி பூசா முகாமில் போய் கேட்கும்போது கோட்டாபயவிடம் கையெழுத்து வாங்கி வாருங்கள், பிள்ளையைக் காட்டுகிறோம் என்றனர். இந்நிலையில் அவரது கையெழுத்தை என்னால் பெறமுடியவில்லை. இன்றும் எனது பிள்ளையை தேடி காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்