யார் இந்த லொஹான் ? பின்னணி தொடர்பில் ஒரு தேடல்

யார் இந்த லொஹான் ரத்வத்த
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே ,அநுராதபுர சிறைச்சாலைக்குள் கடந்த 12ஆம் திகதி கைத்துப்பாக்கியுடன் சென்று இரண்டு தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் முழங்காலிட வைத்தார் எனவும் , அன்றைய தினம் இரவு வெலிக்கடை சிறைச்சாலைக்கு மதுபோதையில் நண்பர்களுடன் சென்று அட்டகாசம் புரிந்ததாகவும் , அவரின் நண்பர்களுக்கு தூக்கு மேடையை சுற்றிக்காட்டியதாகவும் , அப்போது அவர் கையில் கைத்துப்பாக்கி இருந்ததாகவும் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.
அன்றைய தினம் அவரது நண்பர்கள் கூட்டத்தில் திருமதி இலங்கை அழகுராணி போட்டியில் கலந்து கொண்ட புஷ்பிகா டி.சில்வாவும் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. இவர் வெற்றி பெற்றதாக மேடையில் அறிவிக்கப்பட்டு கிரீடம் சூட்டப்பட்டு ஒரு சில நிமிடங்களில் இவரின் கிரீடம் பறிக்கப்பட்டு சர்ச்சை எழுந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக அன்றைய தினம் நண்பர்களுடன் மதுபோதையில் சிறைச்சாலைகளுக்குள் கைத்துப்பாக்கியுடன் சென்று அட்டகாசம் புரிந்தமை தொடர்பில் பல தரப்பினரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருவதுடன் , அவரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கோரி வருகின்றனர்.
அந்நிலையில் பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய அவர் தற்போது தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார். அதனை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
காலம் சென்ற முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டார நாயக்கவின் மருமகன் தான் லொஹான் ரத்வத்தே , அதனால் அவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் மச்சான் ஆவார்.
லொஹானின் தந்தையார் தான் ஜெனரல் அனுருத்த லூகே ரத்வத்த. இவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆட்சி காலமான  1994 முதல் 2001 ஆம் ஆண்டுவரை பிரதி பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தார். மின்சக்தி வலுசக்தி அமைச்சர் உட்பட அமைச்சரவை அமைச்சுப் பதவிகளையும் அவர் வகித்தமை குறிப்பிடத்தக்கது. தலதா மாளிகையின் பிரதி தியவதன நிலமேயாகவும் இவர் பதவி வகித்துள்ளார்.
1994 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாவது ஈழ யுத்தம் ஆரம்பமான போது, விடுதலைப்புலிகளுக்கெதிராக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இவரது தலைமையின் கீழ் பிரதான பங்கை வகித்து இராணுவ நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட்டிருந்தன.
1995 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாத இறுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த யாழ்ப்பாணத்தை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின்போது, இவர் முக்கிய பங்கை ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.
லொஹானின் தந்தை வழி  தலதா மாளிகையின் தியவதன நிலமேயாக இருந்தவர்கள்.(அவரின் தாத்தா , தந்தை)
இவரின் தாத்தா ஹரிஸ் லெக்கே ரத்வத்தே  தலதா மாளிகையின்  தியவதன நிலமேயாகவும், 1947 – 1952ஆம் ஆண்டு கால பகுதியில், ஐக்கிய தேசிய கட்சியின் மாவன்னல  தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.
தியவதன நிலமே என்பது ஸ்ரீ தலதா மாளிகையின் பிரதான பரிபாலன பொறுப்புக்கு உரியவர். .

தலதா மாளிகைக்கு காணிக்கையாக அரசர் காலத்தில் வழங்கப்பட்ட ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலம் உட்பட பல்வேறு சொத்துக்களை பரிபாலிக்கும் பொறுப்பு தியவதன நிலமேயின் கடமைகளில் ஒன்றாகும்.

தியவதன நிலமே தெரிவானது தேர்தல் மூலம் இடம்பெறுவதுடன் தேர்தலின்போது 150 விஹாரைகளின் விஹாராதிபதிகள் மற்றும் தேரர்கள், 16 மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேச செயலாளர்கள் உட்பட 301 பேர் வாக்களிப்பார்கள்.
தியவதன நிலமேயாக தெரிவு செய்யப்படுபவர், 10 வருடங்களுக்கு பதவியிலிருக்க முடியும்.
அவ்வாறான ஒரு பதவி வகித்த பௌத்த பாரம்பரிய கண்டிய சிங்கள சமூகத்தை சேர்ந்த குடும்பத்தை சேர்ந்தவரே லொஹான் ரத்வத்தே.
இவர் 1968ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் திகதி கண்டியில் பௌத்த பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்தார். தனது கல்வியினை கண்டியில் உள்ள Trinity கல்லூரியில் கற்றார்.
கண்டி உடதலவின்ன பிரதேசத்தில் கடந்த 2001.12.05 அன்று  தேர்தல் தினத்தில் வாக்கு பெட்டிகளை எடுத்து சென்ற பேருந்தின் பின்னால் வானில் சென்று கொண்டிருந்த முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் வழி மறிக்கப்பட்டு தாக்கப்பட்டனர்.
தாக்குதலாளிகளிடம் இருந்து அவர்கள் தப்பித்து வேறு பாதை ஊடாக வானில் சென்ற போது அவர்களின் வாகனம் மறிக்கப்பட்டு  வாகனத்தினுள் இருந்த ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு 12 ஆதரவாளர்களையும் கொலை செய்த பின்னர் வாகனத்திற்கு குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.
இந்த சம்பவத்தின் சந்தேக நபர்களாக அன்றைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அனுருத்த ரத்வத்தவும், அவரது புதல்வர்களான லொகான் ரத்வத்த, சாணுக ரத்வத்த ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் நிரபராதிகள் என 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி மேல் நீதிமன்றினால்  தீர்ப்பளிக்கப்பட்டு மூவரும் விடுவிக்கப்பட்டனர்.
அதேவேளை குறித்த வழக்கில் இராணுவத்தை சேர்ந்த ரஞ்சித் விஜேரத்ன, சுனில் டீ சில்வா, கமல் விஜயரட்ன, அனுரகுமார, புத்திதிசாநாயக்க ஆகியோர் குற்றவாளிகளாக காணப்பட்டனர்.
  குற்றச்சாட்டுக்கள்

2001ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த காலப்பகுதிக்குள் பொது தேர்தல் சமயத்தின்போது உடதலவின்ன பகுதியில் 10 முஸ்லிம் இளைஞர்களை மிலோச்சத்தனமாக சுட்டுக் கொன்றமை, ஐந்து முஸ்லிம் இளைஞர்களுக்கு படுகாயம் ஏற்படுத்தியதன் மூலம் இவர்களை படுகொலை செய்ய முயன்றமை, 250 1655 என்ற இலக்கமுடைய வாகனத்தில் பயணம் செய்தவர்களை படுகொலை செய்வது தொடர்பில் சட்டவிரோதமாக கூடி ஆராய்ந்தமை, அரசியல் எதிரிகளை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை, வாக்காளர்களை வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லவிடாமல் தடுத்தமை, வாக்காளர் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தியமை, வாக்காளர் அட்டைகள் மற்றும் வாக்குப் பெட்டியை பலவந்தமாக கொள்ளையிட்டமை உட்பட மொத்த 80 குற்றச்சாட்டுகள் இவ்வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரினால் சுமத்தப்பட்டிருந்தன.

ரத்வத்தைக்கு எதிரான 31 குற்றச்சாட்டுக்கள்

இந்த வழக்கில் பிரதான எதிரியான அனுருத்த ரத்வத்தைக்கு எதிராக 31 குற்றச்சாட்டுக்களும் அவரது புதல்வர்கள் இருவருக்கும் எதிராக 32 குற்றச்சாட்டுக்களும் சட்டமா அதிபரினால் சுமத்தப்பட்டிருந்தன.

இந்த வழக்கு விசாரணையை அடுத்து 706 பக்கம் கொண்ட தீர்ப்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழுவினரால் வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பில் அனுருத்த ரத்வத்தையும் அவரது இரு மகன்மார்களும் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகளாக காணப்பட்ட ஐந்து இராணுவ வீரர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன் கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக தலா ஒவ்வொருவருக்கும் நூறு வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தையின் சார்பில் ஜனாதிபதியின் சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷவும் மகன்மாரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி திரந்த வரலியெத்தவும் விசாரணைகளின் போது ஆஜராகியிருந்தனர். சட்டமா அதிபரின் சார்பில் அன்றைய பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ ஆஜராகியிருந்தார்.

அந்நிலையில்   இந்த தண்டனைக்கு எதிராக ஐந்து இராணுவ வீரர்களும் உயர்நீதிமன்றத்தில் விசேட மேன்முறையீட்டு மனுவினை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவினை விசாரித்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழு, இராணுவ வீரர்கள் ஐவரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் நிரபராதிகள் என தீர்ப்பளித்து 24ஆம் திகதி ஜூலை மாதம் 2009ஆம் ஆண்டு   விடுதலை செய்துள்ளது.
இவ்வாறான பின்னணிகளை கொண்ட லொஹான் 2010ஆம் ஆண்டு முதல் கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவ படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி வருகின்றார்.
அந்நிலையில் தற்போதுள்ள அரசாங்கத்தில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக இருந்த லொஹான் ரத்வத்தே கடந்த டிசம்பர் மாதம் 02ஆம் திகதி  சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராகவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.
தற்போது அவர் தனது அனைத்து அமைச்சு பொறுப்புக்களையும் இராஜினாமா செய்துள்ளார்.

Recommended For You

About the Author: ஈழவன்