மனைவியின் சித்திரவதையால் எடை குறைந்த கணவனுக்கு விவாகரத்து!

மனைவியின் சித்திரவதையால் 21 கிலோ எடை குறைந்தேன் என கணவன் விவாகரத்து மனுவில் குறிப்பிட்டு , விவாகரத்து கோரியுள்ளார்.

அரியானா மாநிலம் ஹிஷார் பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அப்பகுதியை  சேர்ந்த தம்பதிக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கணவர் வங்கியில் பணிபுரிகிறார். மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.

கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காது கேட்கும் கருவியை பயன்படுத்தி வரும் கணவர் மனைவியிடம் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது,

எனது மனைவி செல்வ செழிப்பானவள். அவர் தனது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்பு என்னை அவமானப்படுத்தி வந்தார். சிறிய வி‌ஷயங்களுக்காக சண்டையிடுவார். நாளடைவில் இது சரியாகி விடும் என்று நம்பியிருந்தேன். ஆனால் அவரது நடத்தை மாறவில்லை.

என் மனைவி என்னை நாள்தோறும் சித்ரவதை செய்து வந்தார். திருமண காலம் வரை 74 கிலோவாக இருந்த எனது எடை 53 கிலோவாக குறைந்தது. அதாவது மனைவியின் சித்திரவதையால் 21 கிலோ எடை குறைந்தது. இதனால் எனக்கு விவாகரத்து அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த குற்றச்சாட்டை அவரது மனைவி மறுத்தார். தனது கணவனை தான் எப்போதும் அன்புடனும், மரியாதையுடனும் நடத்தியதாக தெரிவித்தார். திருமணமான 6 மாதங்களிலேயே கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணைக்காக தன்னை கொடுமைபடுத்தியதாகவும், அவமானப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த குடும்பநல நீதிமன்றம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஓகஸ்டு 27 ஆம் திகதி மனைவியிடம் இருந்து கணவருக்கு விவாகரத்து கொடுத்து உத்தரவிட்டது.

அந்த பெண் தனது கணவர் குடும்பத்திற்கு எதிராக பொய்யான புகாரை தெரிவித்து இருப்பதாக குடும்ப நல நீதிமன்றம் தெரிவித்து விவாகரத்து கொடுத்தது.

அந்நிலையில் குடும்பநல நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அந்த பெண் பஞ்சாப் மற்றும் அரியானா உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு    செய்தார். மனைவியின் சித்ரவதையால் 21 கிலோ எடை குறைந்தவரின் விவாகரத்தை உறுதி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன் குடும்பநல நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அந்த பெண் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக தாக்கல் செய்த அனைத்து குற்றவியல் முறைப்பாடுகள் மற்றும் வழக்குகள் பொய்யானது என்றும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்தது.


Recommended For You

About the Author: ஈழவன்