நிதி நிறுவனத்திற்குள் சென்ற விக்கியின் அமைப்பாளர் குழப்பம்:

வவுனியா நிதி நிறுவனம் ஒன்றிற்குள் நேற்று முற்பகல் சென்ற முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் நிறுவனத்திற்குள் பெண் உத்தியோகத்தர்கள் முன்னிலையில் நிதிநிறுவன முகாமையாளருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு குழப்பம் விளைவித்ததாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நிதி நிறுவனம் ஒன்றில் இலகு தவணை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட மோட்டார் சைக்கிளின் தவணைப்பணம் கடந்த நான்கு மாதங்களாக செலுத்தப்படவில்லை.

இதையடுத்து மோட்டார் சைக்கிள் பெற்றுக்கொண்ட நபருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டு நிறுவனத்தினால் மோட்டார் சைக்கிள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் நேற்று முற்பகல் வவுனியா முதலாம் குறுக்குத் தெருவிலுள்ள குறித்த நிதி நிறுவனத்திற்குள் சென்ற முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் முரண்பட்டுள்ளார்.

கட்சி அமைப்பாளர் தனது உறவு முறையான நபர் ஒருவர் தன்னிடம் வாங்கிய பணத்தை செலுத்திவிட்டு மோட்டார் சைக்கிள் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்து குறித்த மோட்டார் சைக்கிளிளை தன்வசம் வைத்திருந்துள்ளார். இதனால் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய மாதாந்த தொகையான 18ஆயிரம் ரூபாவை மோட்டார் சைக்கிளை கொள்வனவு செய்தவர் செலுத்தாது இருந்தமை தெரியவந்தது.
இதனால் ஆத்திரமடைந்தே நிதி நிறுவனத்திற்குச் சென்று பெண் உத்தியோகத்தர் முன்னிலையில் நிறுவனத்தின் முகாமையாளருடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதுடன் தகாதவார்த்தைப்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளதாகவும் குழப்பம் விளைவிக்க முற்பட்டமையும் தெரிய வருகின்றது.

நிதி நிறுவனத்திற்கு சென்ற பொலிசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தியதுடன் நிதி நிறுவனத்தின் நடவடிக்கை தெளிவுபடுத்தப்பட்டு நிதி நிறுவனத்திற்குள் குழப்பம் ஏற்படுத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளமுடியும் என்று பொலிசாரால் அமைப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டு சமரசம் செய்து வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Ananya