நட்சத்திர ஹோட்டலில் 8 மாத ஆடம்பர வாழ்க்கை; ரூ.25 லட்சம் வாடகை பணம் கொடுக்காது தப்பியோட்டம்!

மும்பை நட்சத்திர ஹோட்டலில் தனது மகனுடன் இரண்டு அறைகள் எடுத்து தங்கிவிட்டு, ரூ.25 லட்சம் வாடகை கொடுக்காமல் ஜன்னல் வழியாக தப்பிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடிவருகின்றனர்.

மும்பையிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் எட்டு மாதங்கள் வாடகை எதுவும் கொடுக்காமல் ராஜ வாழ்க்கை வாழ்ந்துவிட்டு ஒருவர் தப்பிச் சென்றிருக்கிறார்.

மும்பை அந்தேரி பகுதியைச் சேர்ந்த முரளி காமத் என்பவர், தன் மகனுடன் நவிமும்பை கார்கர் பகுதியில் உள்ள `ஹோட்டல் த்ரீ ஸ்டார்’ என்ற ஹோட்டலுக்கு கடந்த நவம்பர் மாதம் வந்தார்.

தான் சினிமாதுறையைச் சேர்ந்தவர் என்றும், தனக்கு இரண்டு ஆடம்பர அறைகள் தேவை என்றும் தெரிவித்தார். ஹோட்டலில் அறை பதிவு செய்யும்போது முன்பணம் கொடுக்காமல் தனது பாஸ்போர்ட்டை கொடுத்துவிட்டு, ஒரு மாதத்தில் அட்வான்ஸ் பணம் கொடுப்பதாகத் தெரிவித்தார்.

ஹோட்டல் ஊழியர்கள் அவரின் பேச்சை நம்பி ஹோட்டலில் தங்க அனுமதித்தனர். ஓர் அறையை அலுவலகமாகவும், மற்றோர் அறையை தங்கவும் பயன்படுத்தினார். சொன்னபடி அவர் ஒரு மாதத்தில் அட்வான்ஸ் பணம் கொடுக்கவில்லை. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வாடகையோ, அட்வான்ஸ் பணமோ கொடுக்காமல் இழுத்தடித்துவந்தார்.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பணத்தைக் கொடுக்கும்படி ஹோட்டல் நிர்வாகம் நெருக்கடி கொடுத்தது. இந்தநிலையில் கடந்த மாதம் திடீரென ஹோட்டல் அறையை காலி செய்துவிட்டு தனது 12 வயது மகனை அழைத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

அறை தொடர்ந்து அடைக்கப்பட்டிருந்ததால், ஊழியர்கள் திறந்து பார்த்தபோதுதான் அவர்கள் இரண்டு பேரும் பாத்ரூம் ஜன்னல் வழியாகத் தப்பி சென்றிருப்பது தெரியவந்தது. அறையில் லேப்டாப், மொபைல்போன் ஆகியவற்றை மட்டும் விட்டுச் சென்றிருந்தனர். ஹோட்டல் ஊழியர்களும் தங்களுக்குத் தெரிந்த இடத்தில் தேடினர்.

முரளி ஹோட்டல் வாடகையாக ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டியிருந்தது. இதனால் அவர் ஹோட்டலைவிட்டு வெளியில் சென்றாலே ஊழியர்கள் தீவிரமாகக் கண்காணிக்க ஆரம்பித்தனர்.

எனவேதான் பாத்ரூம் ஜன்னல் வழியாக தப்பிச்சென்றிருப்பது தெரியவந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஹோட்டல் நிர்வாகம் மும்பை போலீஸில் புகார் செய்துள்ளது. போலீஸார் முரளி கொடுத்த பாஸ்போர்ட் முகவரியின் அடிப்படையில் தேடிவருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்