யாழில். முஸ்லீம்களுக்கு வீட்டுத்திட்டம்

காணியற்ற நிலையில் உள்ள முஸ்லிம்களை யாழ்ப்பாணத்தில் குடியமர்த்துவதற்கான வீட்டுத் திட்டங்களை நிர்மாணிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

சில முஸ்லிம் வர்த்தகர்கள் 7.5 ஏக்கர் காணியை வழங்கியுள்ள நிலையில், அவர்களுக்கான வீடமைப்புத் திட்டங்களை வழங்குவது தொடர்பாக கவனம் செலுத்த முடியும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பிரதமர் தெரிவிக்கையில், “தெற்கிலிருந்து பெருமளவான மக்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகின்றனர். அத்துடன் யாழ்ப்பாண மக்கள் தென் பகுதிகளுக்கு செல்கின்றனர்.

இதனிடையே, காணிகளை விடுவித்தல் மற்றும் குடிநீர் பிரச்சினை என்பன யாழ்ப்பாணத்தின் பிரதான பிரச்சினைகளாக உள்ளன. மேல் மாகாணம் நவீனமயப்படுத்தப்பட்டு, பெருநகரமாக மாற்றப்படுவதுபோல, யாழ்ப்பாணமும் பாரிய அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்றவாறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது, நாட்டின் அனைத்து பாகங்களிலும் ஸ்திரத்தன்மை மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அடுத்துவரும், 5 முதல் 10 ஆண்டுகளுக்கான புதிய பொருளாதார நிலைமையை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், வட. மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் உட்பட மேலும் பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்


Recommended For You

About the Author: ஈழவன்