உலக வெப்பமயமாதலால், வேகமெடுக்கும் மின்சார கார் உற்பத்தி..!

உலக கார் சந்தை வெகு வேகமாக மின்சார கார் உற்பத்தியை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது.

முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் மின்சார கார் தயாரிப்பை பிரதான நோக்கமாக கொண்டுள்ளதால் அடுத்த சில ஆண்டுகளில் வாங்கும் விலையில், சொகுசான மின்சார கார்கள் விற்பனைக்கு வரும் சூழல் உருவாகி உள்ளது. இதுகுறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

உலக வெப்பமயமாதலை அடுத்த, அனைத்து நாடுகளுமே சுற்றுச்சூழலை காக்கும் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளன. இதில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சூழலை பாதிக்காத கார்களை மட்டுமே இனி தயாரிக்க வேண்டுமென சட்டம் இயற்றி உள்ளன. இதே போல உலகின் மிகப்பெரிய வாகன சந்தையை கொண்டுள்ள சீனாவும் வாகன தயாரிப்பு விதிகளை கடுமையாக்கி உள்ளது.

இதனால் உலகின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்துமே மின்சார கார் தயாரிப்பில் தீவிரமாக இறங்கி உள்ளன.

ஆனால் மின்சார கார்களை நீண்ட தூரத்தில் இயக்குவதில் உள்ள சிக்கல், கார்களுக்கு சார்ஜ் ஏற்ற போதிய வசதி இல்லாமை, மின்சார கார்களின் மிக அதிக விலை ஆகியவையே தயாரிப்பு நிறுவனங்களுக்கான சவாலாக உள்ளது.

இதனை எதிர்கொண்டே அனைத்து நிறுவனங்களும் மின்சார கார் தயாரிப்பில் இறங்கி உள்ளன.

இதில் ஜெர்மனியின் வோக்ஸ்வேகன் நிறுவனம் ஒரு படி முன்னேறி உள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தின் கார்கள் புகைச்சோதனையில் சிக்கின.

வோல்ஸ்வேகன் கார்களில் இருந்து வெளியாகும் புகை அளவை குறைத்து காட்டி மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்ட அந்த நிறுவனம் ஏறத்தாழ 30 பில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாக செலுத்தியது.

இனி மின்சார கார்களுக்கே எதிர்காலம் என்பதை உணர்ந்துள்ளதாலும், கால மாறுதல்களுக்கு ஏற்ப செயல்படாவிட்டால், 6,65,000 தொழிலாளர்களை கொண்டதும், ஆண்டுக்கு 265 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டுவதுமான நிறுவனம் மூடப்படும் என்பதை உணர்ந்த தால் வோல்ஸ்வேகன் ,மின்சார கார் தயாரிப்பில் தனது முழு கவனத்தையும் திருப்பி உள்ளது.

வோல்ஸ்வேகன், ஆடி, போர்சே, ஸ்கோடா, லம்போர்கினி, சீட் என பல்வேறு பெயர்களில் கார்களை தயாரிக்கும் அந்த நிறுவனம் மின்சார கார்களுக்கான பேட்டரியை தனது சொந்த முயற்சியில் உருவாக்கி உள்ளது.

பிரசல்ஸ் நகரில் உள்ள தொழிற்சாலையில் இந்த பேட்டரி கொண்ட மின்சார காரை சோதனைக்கு உள்ளாக்கி வருகிறது வோல்ஸ் வேகன்.

7 அடி நீளம் கொண்ட லித்தியம் அயன் பேட்டரியில்,12 அடுக்குகள் உள்ளன.

ஒவ்வொரு அடுக்கிலும் 36 செல்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த பேட்டரி ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்த அரைமணி நேரம் மட்டுமே பிடிக்கிறது. முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்லும் வகையில் திறன் கொண்டுள்ளது.

ஈ டிரான் என்று பெயரிடப்பட்டுள்ள எஸ்.யூ.வி ரகத்திலான வோல்ஸ்வேகனின் இந்த புதிய மின்சார கார், அனைத்து சொகுசு வசதிகளையும் கொண்டுள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் 70 வகையான மின்சார கார்களை உருவாக்க திட்டமிட்டுள்ள வோல்ஸ்வேகன் இதற்காக 34 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது.

மேலும் 2030 ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் விற்பனையாகும் பத்து கார்களில் 4 கார்கள் தங்களது மின்சார கார்களாகவே இருக்க வேண்டும் என்பதையும் வோல்ஸ்வேகன் இலக்காக கொண்டுள்ளது.

இதில் போர்சேவின் மின்சார காரான டைகேனை இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரவும், 2025-க்குள் 12 விதமான மின்சார கார்களை ஆடி நிறுவன பெயரில் விற்பனை செய்யவும் வோல்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.

மேலும் கார்களுக்கான பேட்டரிகளை தானே தயாரிப்பதோடு, கார்களுக்கு சார்ஜ் ஏற்றும் மையங்களை அமைக்கவும் வோல்ஸ் வேகன் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் மின்சார கார் விற்பனை இப்போது சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி நிறுவனமான டெஸ்லா கடந்த ஆண்டில் மட்டும் 2,20,000 மின்சார கார்களை விற்பனை செய்துள்ளது.

சீனாவில் பிஏஐசி நிறுவனம் 1,30,000 கார்களையும், ரெனால்ட், நிசான், மிட்சுபிசி கூட்டு நிறுவனம் 1,30,000 கார்களையும், பிஎம்டபிள்யூ நிறுவனம் 33,000 கார்களையும் விற்பனை செய்து உள்ளது.

மின்சார கார் விற்பனை சூடு பிடித்துள்ளதை அடுத்தே வோல்ஸ்வேகனும் பிற நிறுவனங்களும், இந்த ரக கார்கள் உற்பத்தியில் தீவிரமாக இறங்கி உள்ளன.

இப்போது பேட்டரிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளதால் பெட்ரோல், டீசல் கார்களை விட மின்சார கார்களை வருகிற 2022 ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக விற்பனை செய்ய அனைத்து நிறுவனங்களும் இலக்கு நிர்ணயித்து உள்ளன.

மின்சார கார் தயாரிப்பிற்கு கூடுதல் செலவு பிடிப்பதால் ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கு ஏற்ற நிறுவனத்தை கூட்டுச் சேர்ந்து உள்ளன.

பிஎம்டபிள்யூ நிறுவனமும் டைம்லெர் நிறுவனமும் கூட்டணி அமைத்துள்ளன.

வோல்ஸ் வேகன் அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்கோ ஏஐ நிறுவனத்துடனும், போர்டு நிறுவனம் வோல்ஸ்வேகனுடனும், ரெனால்ட், நிசான், மிட்சுபிசி நிறுவனங்கள் ஒன்றாகவும், இணைந்துள்ளன.

இதே நேரத்தில் ஹூண்டாய், டயோட்டா உள்ளிட்ட நிறுவனங்களும் மின்சார கார் தயாரிப்பை தீவிரப்படுத்தி உள்ளன.

இதனால் 2025 ஆம் ஆண்டில் 1.4மில்லியன் மின்சார கார்களை விற்பனை செய்து வோல்ஸ் வேகன் முதலிடத்திலும், ரெனால்ட் , நிசான், மிட்சுபிசி கூட்டு நிறுவனங்கள் 5,90,000 கார்களை விற்பனை செய்து இரண்டாவது இடத்திலும், சீனாவின் கிலே நிறுவனத்தின் வோல்வோ மூன்றாவது இடத்திலும், அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் 4,13,000 கார்களை விற்று நான்காவது இடத்திலும்,டயோட்டா, டைம்லெர், ஹூண்டாய், ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு ஆகியவை அடுத்த இடங்களிலும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் தனது ஒய் ரக மின்சார கார்களின் விற்பனையை தொடங்கி வைத்த டெஸ்லா நிறுவன உரிமையாளர் எலன் முஸ்க், எல்லா நிறுவனங்களுமே மின்சார கார்களை தயாரிக்க வேண்டும் என்பதே தமது நோக்கம் என்றார்.

இப்போது அவரது நோக்கம் நடைமுறைக்கு வரும் சூழல் மிக வேகமாக உருவாகி வருகிறது.


Recommended For You

About the Author: Editor