13 ஆயிரம் சிறுவர்கள் காப்பகங்களில் வாழ்கின்றனர்!

நாட்டில் பெற்றோர் இல்லாத 13,000 சிறுவர்கள் காப்பகங்களில் இருப்பதாகவும் அவர்களுக்கு அநீதிகள், துன்புறுத்தல்கள் இழைக்கப்படுமாக இருந்தால் அவை வெளிக்கொண்டுவரப்படுவதில்லை எனவும் றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

தேசிய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தாக்குதல் அல்லது துன்புறுத்தலுக்குள்ளான ஒன்று அல்லது இரண்டு சிறுவர்களாவது நாளாந்தம் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
தாக்குதல் சம்பவங்களினால் அமில தாக்குதலுக்குள்ளான, சிகரெட்டினால் சுடப்பட்ட, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுவர் ஒருவர் அல்லது இருவராவது நாளொன்றுக்கு சிறுவர் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். இது மிகவும் ஆபத்தான நிலையாகும்.
சிறுவர்களுக்கு உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தொடர்ந்து கொடுமைகள் இடம்பெற்று வருகின்றன. துஷ்பிரயோகத்துக்குள்ளான ஆயிரக்கணக்கான சிறுவர்கள் நாட்டில் இருக்கிறார்கள். சிறுவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளுதல், துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துதல், பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துதல் போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன.
அதுமாத்திரமல்லாமல், சிறுவர்கள் மதுபான பாவனைக்கும் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். ஆண்பிள்ளைகள் மத்திரமின்றி பெண் பிள்ளைகளும் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
அதேபோன்று, அநேகமான செல்வந்தர்களின் வீடுகளில் சிறுவர்கள் வீட்டுப்பணிகளுக்கு அமர்த்தப்படுகிறார்கள். தந்தை, தாய் இல்லாமல் 13 ஆயிரம் வரையிலான சிறுவர்கள் பாதுகாப்பு இல்லங்களிலிருந்து வருகிறார்கள்.
தற்போதுள்ள சூழ்நிலையில் அநேகமான சிறுவர்கள் அவர்களின் தந்தைமார், சித்தப்பாமார் ஆகியோரினால் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்த நிலைமை சிறுவருக்கு மிகவும் அச்சுறுத்தல் மிக்கதாக அமையும். அநேகமான சிறுவர்கள் தனக்கு எதிராக இடம்பெறும் துன்புறுத்தல்களை கூறுவது இல்லை. 18 வயதுவரை சிறுவர்கள் கல்வி கற்கவேண்டியது அவசியமாகும்.
சிறுவர்கள் பாடசாலைக்கு அனுப்பவேண்டியதும் கட்டாயமாகும்.
மாறாக சிறுவர்கள் வீடுகளில் பணிக்கு அமர்த்தப்படுவார்களாக இருந்தால் அல்லது கடைகளில் பணிக்கு அமர்த்தப்படுவார்களாக இருந்தால் அல்லது தாக்குதலுக்கு உட்படுத்தப்படுவார்களாக இருந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யவேண்டியது அவசியமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


Recommended For You

About the Author: ஈழவன்