தென் கொரியாவுடனான உறவு முறிந்தது – வட கொரியா!

தென் கொரியாவுடனான உறவு முறிந்துள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது.

தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் நேற்று(வியாழக்கிழமை) ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் முற்றிலும் தவறான நடவடிக்கைகளே இருநாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முறிவுக்கு காரணம் எனவும் வட கொரியா கூறியுள்ளது.

இதற்கிடையில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வட கொரியா இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

ஒரு மாதத்துக்கும் குறைவான காலத்தில் மேற்கொள்ளப்படும் ஆறாவது பரிசோதனையாக இது கருதப்படுகிறது.

வட கொரியா சுமார் ஆறு நாட்களுக்கு முன்பு, இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஜப்பான் கடல் பகுதியை நோக்கி ஏவியது.

கொரிய பிராந்தியத்தில் அணு ஆயுதமற்ற நிலையை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் இடையே கடந்த ஜூன் மாதம் நடந்த சந்திப்பில் உடன்பாடு எட்டப்பட்டிருந்த நிலையில், இந்த தொடர் ஏவுகணை பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor