ரிசாத் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது

டயகம பகுதியைச் சேர்ந்த (16 வயது) சிறுமியின் மரணம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் மனைவியான ஷெஹாப்தீன் ஆயிஷா (46 வயது) மற்றும் மனைவியின் தந்தையான மொஹமட் ஷெஹாப்தீன் (70 வயது ) வேலைக்கமர்த்திய தரகர் உள்ளிட்டோர் கைது  செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாட் பதியுதீனின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் டயகம 3ம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

கடந்த 3ஆம் திகதி தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சிறுமியின் மரணம் தொடர்பில் பொலிஸார் பல்வேறு  கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை), பொரளை பொலிஸை சேர்ந்த விசேட குழு, ரிசாத் பதியுதீனின் மனைவியிடம் வாக்குமூலமொன்றை பதிவு செய்திருந்தது.

இந்நிலையிலேயே ரிசாத் பதியுதீனின் மனைவி  உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்