குடிபோதையில் வகுப்பிற்குள் நுழைந்த மாணவர்களுக்கு நேர்ந்த கதி

குடிபோதையில் வகுப்பறைக்குள் நுழைந்த மாணவர்களுக்கு தீர்ப்பின் மூலம் நீதிமன்றம் புத்தி புகட்டியுள்ளது.

இந்தியாவின், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அமைந்துள்ள  தனியார் கலை அறிவியல் கல்லூரியில் கணினி விஞ்ஞான பீடத்தில்  2 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 8 மாணவர்கள் குடிபோதையில் வகுப்பறைக்குள் நுழைந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதை கண்டித்த கல்லூரி நிர்வாகம் 8 மாணவர்களையும் கல்லூரியிலிருந்து வெளியேற்றியது. மேலும் அடுத்த மூன்று ஆண்டுகள் படிப்பைத் தொடர்வதற்கும் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து 8 மாணவர்களும் கல்லூரியின்  உத்தரவை இரத்து செய்து மீண்டும் படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டி  மதுரை உயர்நீதி மன்றில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் தமது தீர்ப்பில், மாணவர்கள் குடிபோதையில் வகுப்பறைக்குள் நுழைந்தது தவறு தான்.

அந்த தவறை தற்போது உணர்ந்துள்ளனர். அவர்கள் தண்டிக்கப்பட்டால் எதிர்காலம் பாதிக்கப்படும். மாணவர்கள் தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்துள்ளனர்.

எனவே 8 பேரும் சுதந்திர தினத்தன்று (நேற்று ) விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுத்தப்படுத்தும் பணி, அங்கு வரும் பொதுமக்களுக்கு உதவி செய்தல் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். மாலை 4 மணி முதல் 6 மணி வரை மதுவிலக்கு பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவிற்கு அமையச் சுதந்திர தினமான நேற்று காமராஜர் நினைவு இல்லத்தில் காலை 9 மணி முதல்  8 மாணவர்களும்  சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அங்கு வந்த பொதுமக்கள் மற்றும் முதியவர்களுக்கு மாணவர்கள் உதவியுள்ளனர். அதனை அடுத்து மாலை 4 மணி தொடக்கம்  8 மாணவர்களும் மதுவிலக்கு பிரசாரத்தில் ஈடுபட உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Ananya